மொட்டைக்கடிதம் எழுதுபவர்களுக்கு கடும் தண்டனை!! வடக்கு ஆளுநர் கூறுகின்றார்!!
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையின் போது வடக்கு மாகாணத்திற்கு வந்த மூன்று மொட்டைக்
கடிதங்களும் பொய் எனத் தெரிவித்திருக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன்
இனிமேலும் இவ்வாறு மொட்டை கடிதம் எழுதுபவர்களுக்கு எதிராக அதியுட்சபட்ச தண்டணை
வழங்கப்படுமென்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நேற்று நடாத்திய ஊடக
சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அங்கு அவர் மேலும்
தெரிவித்ததாவது,
அவசரகாலச் சட்டம் இருக்கும் போது கண்காணாதவர்கள் எழுதும் மொட்டை கடிதங்கள் பாதுகாப்புக்கு
பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்தக் காலப் பகுதியில் வடக்கு மாணத்திற்கு மூன்று
மொட்டைக் கடிதங்கள் வந்துள்ளன. அதாவது நல்லூர் ஆலயம், வவுனியா வைத்தியசாலை,சுண்டுக்குழி
மகளிர் கல்லூரி ஆகிய மூன்று இடங்களிலும் தாக்குதல் மேற்கொள்ள போவதாக அந்தக் கடிதங்களில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதங்களைப் பொறுத்தவரையில் அவற்றை நாங்கள் நிராகரிக்க முடியாது. அதே நேரம்
இதெல்லாம் உண்மை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆகையினால்இரட்டை தலை இருக்கின்ற பாம்பு போல இரண்டுக்கும் நடுவில் நாங்கள் நடக்க
வேண்டியுள்ளது.
இவ்வாறு வந்த இந்தக் கடிதங்களை நாங்கள் தேடிப் பார்க்கின்ற போது எல்லாம் அப்பட்டமான
பொய்யாகவே தெரிய வந்திருக்கிறது. அரச புலனாய்வுக்கு ஊடாகவும் யாழ் புலனாய்வுக்கு
ஊடாகவும் வேறு புலனாய்வுகளினூடாகவும்; நாங்கள் இவை தொடர்பில் தேடினோம். அவ்வாறு
தேடிப் பார்க்கின்ற போது எல்லாமே பொய்யான கடிதங்களாக இருக்கிறது.
ஆகவே நாடும் தேசமும் சமூதாயமும் ஆபத்தில் இருக்கின்ற நேரத்தில் தங்களுடைய தனிப்பட்ட
பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இந்த மாதிரியாக அபாயகரமான விசயங்களைச் செய்யாதீர்கள் என
நாங்கள் மக்களிடத்தே கேட்டக் கொள்கின்றோம். இனி அப்படிச் செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்ட
நபர் மீது ஆகக் கூடுதலான நடவடிக்கையை எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களுக்கு எவ்வளவோ வேலைகள் செய்ய வேண்டிய உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க
வேண்டும். அன்றாட வேலைகளைச் செய்ய வேண்டும். இராணுவம் வீதியில் இருக்கிறது. இராணுவம்
வீதியில் இருக்காமல் முகாம்களுக்கு போகக் கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும். மக்கள்
யதார்த்த வாழ்விற்கு திரும்ப வேண்டுமென்று தான் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆகையினால் மொட்டைக் கடிதம் எழுதும் ஆசான்களுக்கு சொல்ல வேண்டியது என்னவெனில் இனிமேல்
எழுதினால் பிடிபட்டால் ஆக்ககூடுதலான தண்டனை வழங்குவோம். ஆகவே இனிமேலும் மொட்டைக்
கடிதங்களை எழுவதை நிறுத்த வேண்டும் என்றார்.