திருகோணமலையில் பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை இடித்து புத்தர் சிலை!!! (Photos)
கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின்
அத்திபாரம் உடைக்கப்பட்டு குறித்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை புத்த பிக்கு
ஒருவரின் தலைமையிலான சிலர் கடந்த ஒருவார காலமாக மேற்கொண்டு வருவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு கையகப்படுத்தியிருந்த நிலையில் அவ்விடத்தில்
எவ்வாறு புத்தர் சிலை வைக்க முடியும் எனத் தென்கயிலை ஆதின குரு முதல்வர்கள்
தெரிவிக்கின்றனர்.
இவ் விடயம் தொடர்பில் மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் வைத்திய கலாநிதி
ஞான குணாளன் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியதனூடக குறித்த பணிகளை நேற்றுடன் உடனடியாக
நிறுத்துவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்திருந்த நிலையில் இன்று மீண்டும் பிள்ளையார்
இருந்த இடத்தில் அத்திவாரம் உடைக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கும் பணிகள் தொடர்வதாகவும்
தென்கயிலை ஆதீனம் குருமார்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீண்டும் குறித்த விடயம் தொடர்பாக இன்று திருமலை மாவட்டச் செயலருக்கும்
பிரதேச சபை தவிசாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளனுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும்
அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இவ்வாறான அத்துமீறல்கள் இடம்பெறுவது
கவலையளிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.