யாழில் பக்கத்து வீட்டு நாயின் திருவிளையாடல்!! ஒரே குடும்பத்து 3 பெண்கள் சிறையில்!!
வளர்ப்பு நாயால் அயலர்வர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பில் முடிந்ததில் 3
பெண்கள் உள்பட நால்வர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்
அத்துடன், அயல் வீட்டுப் பெண்கள் தாக்கியதில் காயமடைந்த தாயாரும் அவரது மகன், மகள் என
மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நல்லூர், செம்மணி வீதியில் செட்டத்தெரு தோட்டம் என்ற இடத்தில் நேற்று
புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
அதே இடத்தில் வசிக்கும் அயலவர்களுக்கு இடையே வளர்ப்பு நாயால் கடந்த வாரம் முரண்பாடு
ஏற்பட்டது.
இந்த நிலையில் நாய் வளர்க்கும் குடியிருப்பாளரின் மனைவி மற்றும் அவரது மகன், மகள்
மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை ஒன்றுக்காகச் சென்றுவிட்டு நேற்று
மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.
அவர்களை வீட்டு வாசலில் வைத்து இடைமறித்த அயல் வீட்டில் வசிக்கும் சிறுமி உள்ளிட்ட பெண்கள்
மூவர் மற்றும் ஆண் ஒருவர் என நால்வர் தாக்குதல் நடத்தினர்.
தாய் மற்றும் அவரது பிள்ளைகள் இருவரையும் கைகளாலும் கால்களாலும் பெண்கள் மூவரும்
தாக்கினார்கள். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நகரில் பணியிலிருந்த கணவருக்கு
தாக்குதலுக்குள்ளான பெண் தகவல் வழங்கியுள்ளார்.
அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்த குடும்பத்தலைவர், பொலிஸாரையும்
அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றார். அங்கு தாக்குதலுக்குள்ளான பெண், அவரது
பிள்ளைகள் இருவரையும் மீட்ட பொலிஸார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.
அத்துடன், குடும்பத்தலைவரிடம் முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள் என்று
குற்றஞ்சாட்டப்பட்ட சிறுமி உள்ளிட்ட பெண்கள் மூவர் மற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் தாயாரும் மகள் என இரு பெண்களும் மற்றும் கணவன் மனைவி உறவுமுறை கொண்டவர்கள்.
சந்தேகநபர்கள் நால்வரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம்
முன்னிலையில் பொலிஸார் இன்று முற்படுத்தினர். சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி
மு.றெமிடியஸ் முன்னிலையானார்.
சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க பொலிஸார் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், சந்தேகநபர்கள் மூவரை விளக்கமறியலில்
வைக்க உத்தரவிட்டதுடன், சிறுமியை அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் தங்க வைக்க
உத்தரவிட்டார்.