யாழ் வல்லைவெளி முனியின் விளையாட்டு குறைந்து விட்டதா?? அந்தக் காலத்தில் நடந்தது என்ன? கூறுவது யார்?
வல்லை முனீசுவரரின் செல்வாக்குக் குறைந்து விட்டதா? வல்லை வெளியால் பயணிக்கும் வேளையில் என் நெஞ்சைக் குடையும் கேள்வி இது.
.
1902 ஆம் ஆண்டில் வல்லைப் பாலம் கட்டப்பட்ட பின்னர் வடமராட்சிக்கும் வலிகாமத்திற்குமான இணைப்புப் பாதையாக வல்லைப் பாதையே விளங்குகின்றது. அதற்கு முன்னர் வடமராட்சி வலிகாமம் இணைப்புப் பாதையாக வாதரவத்தையே விளங்கியது. இதனால் ஒருகாலத்தில் வீரவாணி (வாதரவத்தை) செழிப்புப் பெற்ற ஊராகத் திகழ்ந்திருக்கிறது.
.
வல்லையினூடாக மக்கள் போக்குவரத்துச் செய்யப் பயந்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. அது பாலைநிலச் சாயலைக் கொண்டிருந்தது என்பதற்கு அப்பால் அம்மையன், கந்தன், ஆட்குத்தி நாகன் எனப் பெருந்திருடர்களின் ஆட்சியும் அப்பிரதேசத்தில் ஒரு காலத்தில் நிலவியதாம்.
.
புறாப்பொறுக்கியை மையப்படுத்தி வல்லை முனியின் (முனீசுவரன்) ஆதிக்கம் நிலவியது. இவற்றிற்கெல்லாம் பயந்த மக்கள் வல்லை வெளியூடான பயணத்தைத் தவிர்த்தனர். கப்புது – வாதரவத்தை – நீர்வேலி ஊடாகவே பயணம் மேற்கொண்டனர்.
.
காதலியாற்றுப்படை பாடிய வடமராட்சியைச் சேர்ந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை வல்லை முனியைப் பற்றியும் திருடர்களைப் பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
.
“புறாப் பொறுக்கி ஆலென் பெருமரம்
தன்னைத் தன்வாழ் பதியெனக் கொண்ட
வல்லை முனியும் வாரிரு சங்கிலி
கலகல வென்னப் பலபல ஒலியொடு
தன்பரி வாரம் சார்ந்து சூழப்
பாதி யாம வேளை தன்னில்
கூகூ என்று குமுறிக் குமுறிப்
பற்பல உருவோடு எழுந்து இருந்தும்
இராவழி போந்திடு மாந்தரை அடித்துந்
தொல்லை செய்யும் பொல்லாத் தனியிடம்”
புறாப்பொறுக்கியை மையப்படுத்தி இருந்த முனீசுவரர் வல்லைக் கடல் நீரேரிக்கு அண்மையில் மையங்கொண்டார். அதற்குப் பின்னர் போவோர் வருவோர் உண்டியலில் காணிக்கை செலுத்தி வணங்கி – தம்மைப் பாதுகாக்குமாறு வழுத்திப் பின் பயணந் தொடர்வதை வழக்கமாக்கினர்.
.
காலவோட்டத்தில் முனிசுவரருக்குப் பக்கத்தில் பிள்ளையாரும் சேர்ந்து கொண்டார். (பிள்ளையார் கோவில் வந்த காலம் பற்றி எனக்குச் சரியாக ஞாபகமில்லை. ஆனால் ஆமியின் வரவுக்குப் பின்னர்தான் இந்தக் கோவில் வந்தது என்கின்றனர்.)
போர்க்காலத்தில் வல்லை வெளிப் பயணம் உயிராபத்து மிக்கதாக விளங்கியமையால் பிள்ளையாரை நேர்ந்து வணங்கிப் பயணம் செய்வோருடைய எண்ணிக்கையும் பெருகியது. இதனால் முனீசுவரரை வணங்குகின்றார்களோ இல்லையோ பிள்ளையாரை வணங்கத் தவறுவார் இலர் எனக் கூறும் அளவிற்கு விநாயகரின் செல்வாக்கு மேலோங்கியது.
அண்மைக் காலமாக எதிரே ஓர் ஆஞ்சநேயரும் இங்கு தோற்றம் பெற்று விட்டார். (ஆண்டு சரியாக ஞாபகமில்லை. ஓர் ஐந்தாண்டுக்குள் இருக்கலாம்)
.
ஆக, வல்லை முனீசுவரர், அம்மையன், கந்தன், ஆட்குத்தி நாகன் என இவர்களை எல்லாம் இக்காலத்தவர்கள் மறந்து விட்டனர். விநாயகரும் ஆஞ்சநேயரும் செல்வாக்குப் பெற்று விட்டனர். காலமாற்றத்திற்கேற்ப வழிபாட்டு முறையும் மாற்றங்காணத் தொடங்கிவிட்டது.
.
இன்று 05.04.2015 வடமராட்சிக்குச் செல்லும் தேவை ஏற்பட்ட போது மூன்று கோவில்களுக்கும் மத்தியில் ஒரு பதினைந்து நிமிடங்கள் நின்று மக்கள் வழிபாட்டைத் தரிசித்தேன். ஒரு சில வாகனங்களைத் தவிர ஏனையவை யாவும் கோவிலடியில் தரித்தன. அதில் எல்லோரும் பிள்ளையாரைக் கைகூப்பித் தொழுதனர். சிலர் திருநீறு பூசினர். சிலர், அருகில் இருந்த இரப்போர்க்கு இரங்கி வழங்கினர். சிலர் ஆஞ்சநேயரையும் வணங்கினர். ஓர் ஐம்பது பேரை அவதானித்திருப்பேன். ஐந்துபேருக்குள்ளாகத்தான் வல்லை முனீசுவரரை வழிபாடு செய்தனர். இது ஏன் என்றுதான் என்னுள் விடை கிடைக்கவில்லை.
.
இதனைத்தான் முந்தி வந்த செவியை பிந்த வந்த கொம்பு மறைத்தது என்று சொல்லி வைத்தார்களோ?
நன்றி
Laleesan Laleesan முகப்பக்கம்