மருத்துவச் செய்திகள்

தன்னிலும் விட ஒரு வயது குறைந்த இளைஞனை காதலிக்கும் யாழ் தர்சிகாவின் கவலை இது!!

மனநல மருத்துவரை நாடிய யாழ்ப்பாண யுவதியின் கதை இது

*தர்சிகா (23)*
*யாழ்ப்பாணம்*

ஒரு வருடமாக என்னை விட ஒரு வயது குறைந்தவரைக் காதலிக்கின்றேன். அவரும் என்னை
உயிராகக் காதலித்தார். ஆனால் கடந்த இரு மாதங்களாக வெளியூருக்கு வேலைக்குச் சென்றதில்
இருந்து அவர் என்னைத் தவிர்க்க நினைக்கின்றார். ஆனால் ‘நான் தப்பு செய்ய மாட்டேன்’ என்று
அடிக்கடி சொல்வார். இப்போது அவரும் வேறு ஒரு பெண்ணும் காதலிப்பதாக நான் அறிந்தேன். இது
பற்றி அவரிடம் கேட்டதற்கு ‘நீ என்மேல் சந்தேகப்படுகின்றாய். இனிமேல் நமக்குள் ஒத்து வராது’
என்கிறார். என்னால் அவரை விட்டுக் கொடுக்க இயலவில்லை. நான் என்ன செய்வது?

பதில்: பிரியமான சகோதரி! உங்களின் நீண்ட மடலினை வாசிக்கும் போதே உங்களின் உண்மையான
காதலுணர்வு புரிகின்றது. என்ன செய்வது? நீங்கள் உங்களுக்கு ஏற்பட்ட காதலுணர்வை
வெளிப்படுத்த ஒரு ஆண் கிடைத்து விட்ட நிலையில் காதலித்து இருக்கின்றீர்கள். மனித வாழ்வில்
ஒவ்வொருவருக்கும் ஏற்படும் இயல்பான உணர்வுதானே காதல். உண்மையில் காதலுணர்வு என்பது ஒரு
பூட்டுப் போன்றது. பொருத்தமான சாவி கிடைத்தால் மட்டும் திறக்கும். பொருத்தமில்லாத
சாவிகளும் சில வேளைகளில் பூட்டைத் திறக்கும். ஆனால் எப்போதும் அது சரியாக இருக்காது.
கஷ்ட நேரங்களில் திறபடாது சிக்கல் கொடுக்கும்.

உங்கள் காதல் துணையும் உங்களுக்குப் பொருத்தமில்லாத ஒரு ஆண் என நினைக்கின்றேன். ஏனெனில்
உங்களைப் போன்ற தூய காதலுள்ள ஒரு பெண்ணுக்கு ‘காதலி என்றால் ஒருத்திதான்’ என்ற
மனப்பாங்கு உள்ள ஆண்தான் வேண்டும். நீங்கள் இப்போது தேர்ந்தெடுத்துள்ள காதலன் ‘கள்ளச்
சாவி’க்கு உரிய இயல்புகளையே கொண்டவர். உங்களுக்குப் புரியும் என நினைக்கின்றேன். ஆண்கள்
மட்டுமல்ல பெண்களிலும் பல ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

உண்மையில் காதல் என்பது தனியே உடற் கவர்ச்சியின் அடிப்படையில் வரக்கூடாது. புற அழகில்
தொடங்கி, அக அழகில் மயங்கி, பின் அகமும் புறமும் இணைந்து வாழும் வாழ்க்கையே காதல்
வாழ்க்கை. இதில் அறிவு, மனப்பாங்கு, வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், எண்ணங்கள்,
கொள்கைகள் போன்ற இன்னோரன்ன விடயங்களும் பொருந்தும் போதே காதல் வாழ்வு மண வாழ்வாகி இல்லற
வாழ்வு சிறக்கும்.

உங்கள் கடிதத்தில் ‘அவர் தப்புப் பண்ணும் போது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை’ என்று
எழுதியுள்ளீர்கள். தப்பு என்று நீங்கள் குறிப்பிடுவது உடலுறவையா? என்பது எனக்குப்
புரியவில்லை. அப்படி நடந்திருந்தால் கூட பரவாயில்லை. உடலில் ஏற்பட்ட அழுக்கைக்
கழுவுவது போல உங்கள் காதலருடனான பழக்கத்தை அழுக்காக நினைத்துக் கழுவி விடுங்கள்.

சரியான காலம் வரும். அப்போது சரியான காதலன் வருவான். அது கணவனாகவும் இருக்கலாம்.
திருமணத்தின் பின் கணவனை நன்றாகக் காதலியுங்கள். ஆனால் கணவனை மிகவும் ஆறுதலாக,
கவனமாகத் தெரிவு செய்யுங்கள். வாழ்வு மகிழ்வாய் அமையும். உலகில் உள்ள தீர்க்க முடியாத
பிரச்சினைகளுக்கெல்லாம் திறம்படத் தீர்வு தரும் ஒருவன் இருக்கின்றான். அவன்தான் ‘காலம்’.
காலத்தின் கைகளில் உங்களின் பிரச்சினையை ஒப்படையுங்கள். சரியான நேரத்தில் சரியான
காதலனை அவன் தருவான். நீங்கள் தான் விழிப்பாய் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

————————————————————————

*சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும்
பிரச்சனைகள் உள்ளதா? உடனே எமக்கு எழுதி அனுப்புங்கள். மனநல நிபுணர்கள் உங்கள்
பிரச்சனைகளிற்கான தீர்வை தர தயாராக இருக்கிறார்கள்.*

*[email protected] *
*அல்லது*
**