பிக்குவுக்கு கழுவிய வவுனியா பிரதேசசெயலாளர்!! பெண்ணுக்கு காட்டுக்குள் இடம் காட்டியது ஏன்??
தனது காணியில் தனது அனுமதி இல்லாமல் பௌத்த மடம் அமைக்கப்பட்டுள்ளது என்று
குற்றம்சாட்டியுள்ள பெண்ணொருவர், தனது காணியை மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை
விடுத்துள்ளார். இது தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும்
முறையிடப்பட்டு, விசாரணைகள் நடந்து வருகின்றது.
கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பௌத்த விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த விகாரையின் பின்புறமாக உள்ள காணியில், விகாரையை பராமரிக்கும் பிக்கு மற்றும்
சிலர் தங்ககுவதற்கு இரண்டு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் இருந்து
நாடு திரும்பியுள்ள காணி உரிமையாளரான பெண், காணியை மீள ஒப்படைக்க வேண்டுமென
வலியுறுத்தி வருகிறார்.
விடுதிகள் அமைக்கப்பட்டுள்ள தனது 3 ஏக்கர் காணியை துப்பரவு செய்ய சென்றபோது, அருகில்
முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர் மிரட்டுகின்றனர் என்றும் அவர் மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தார்.
யுத்த நெருக்கடியையடுத்து 2006ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றிருந்தார் இந்த
பெண். 2017 இல் மீண்டும் நாடு திரும்பியபோது, தனது காணியில் கட்டடங்கள்
அமைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
காணிக்குள் நுழைந்து துப்பரவு பணியில் ஈடுபட முயன்றபோது, அருகிலுள்ள இராணுவத்தினர்
மிரட்டுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். வீட்டுத் திட்டம் கிடைத்தும், காணி சிக்கலால்
வீடமைக்க முடியவில்லையென்றும் தெரிவித்தார்.
“தனது காணிக்கு பின்புறமாக உள்ள காட்டு பகுதியில் ஒரு துண்டு நிலத்தை தருவதாக
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கூறுகிறார். காட்டுக்குள் வசிக்க முடியாதென
மறுத்துவிட்டேன்“ என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டையடுத்து, நேற்று முன்தினம் மனித உரிமைகள் ஆணைக்குழு
இது தொடர்பான விசாரணைகளை நடத்தியிருந்தது. காணிக்கு அருகில் உள்ள 56வது
படைப்பிரிவின் முகாம் பொறுப்பதிகாரி, 56வது படைப்பிரிவின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி,
பிரதேச செயலக உத்தியோகத்தர் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
ஏன் இந்த விடயத்தில் இராணுவம் தலையிடுகிறது என மனித உரிமைகள் ஆணைக்குழு
வினவியபோது, “நாம் பெண்ணை அச்சுறுத்தவில்லை. விகாரை காணியை பராமரித்து தர
வேண்டுமென விகாரதிபதி கோரியதற்குமைவாக அதை பராமரித்து வந்தோம். இராணுவத்திற்கு
காணி அதிகாரங்கள் கிடையாது என்பதால் இனி இந்த விடயத்தில் தலையிட மாட்டோம்“ என
குறிப்பிட்ட இராணுவ அதிகாரிகள், அதை எழுத்துமூலமும் வழங்கினர்.
இராணுவத்தினரின் சிக்கலை தீர்த்தபோதும், வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் எடுத்து
முடிவால் அந்த பெண் தொடர்ந்தும் நெருக்கடியில் இருக்கிறார். கட்டடம் அமைக்கப்பட்டுள்ள
காணிக்கு பின்புறமாக- காட்டு பகுதியில் காணி வழங்குவதாக பிரதேச செயலாளர் கூறியதை
ஏற்க மறுத்துள்ள அந்த பெண், தனது சொந்தக்காணியே தனக்கு தேவையென மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.
இதேவேளை, பௌத்த விகாரை அமைந்துள்ள 7 ஏக்கர் காணியை 2010ஆம் ஆண்டு, விகாரை
அமைப்பதற்காக பிரதேசசெயலகத்தால் வழங்கப்பட்டுள்ளது. காணியின் உரித்து தொடர்பாக
ஆராயாமல், பிரதேசசெயலகம் இப்படி நடந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.