இந்தியச் செய்திகள்

புத்தாடை வாங்க காசில்லை!! விரக்தியில் மகனின் கழுத்தை அறுத்து தாய் தற்கொலை முயற்சி!!

மகனின் பிறந்த நாளுக்கு கணவர் புத்தாடை வாங்கி தராததால் விரக்தியடைந்த இளம்தாய், மகனின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சீனிவாசன் நகர் நடராஜன் தெருவில் வசித்து வருபவர் பானு பிரசாத் (வயது 35). வடமாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 6 ஆண்டுகளாக அம்பத்தூரில்
பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மம்தா (30). இவர்களது மகன் ராஜ்
(4).

இந்நிலையில் தனது மகன் ராஜூவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நேற்று முன்தினம் பானு
பிரசாத்திடம் மகனுக்கு புத்தாடை வாங்கி வரும்படி மம்தா கூறியுள்ளார்.

அதற்கு பானு பிரசாத் தற்போது பணம் இல்லை என்றும், பிறகு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து
பானுபிரசாத் பானிபூரி விற்பதற்காக நேற்று முன்தினம் மாலை அம்பத்தூருக்கு சென்றார்.

பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி மம்தாவும், அவரது மகன் ராஜ்
இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு
அதிர்ச்சியடைந்த பானு பிரசாத் அலறி சத்தம் போட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 2 பேரையும்
மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தாய்,
மகன் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், பானு பிரசாத் வெளியே சென்ற பிறகு கணவர் மேல் உள்ள ஆத்திரத்தில் விரக்தி
அடைந்து காய் நறுக்கும் கத்தியை எடுத்து மம்தா தனது மகன் ராஜூவின் கழுத்து, வாய், கை
ஆகிய பகுதிகளில் அறுத்து விட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது
தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக பானுபிரசாத்திடம் திருமுல்லைவாயல் போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.