அன்புள்ள சனிபகவானுக்கு, எப்படி இருக்கிறீர்கள்? சனியனுக்கு ஒரு கடிதம்!!

அன்புள்ள சனிபகவானுக்கு,
எப்படி இருக்கிறீர்கள்? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இன்று நீங்கள் வீடு மாற்றிக் கொண்டு சென்றதாகக் கேள்விப்பட்டோம்.
‘மகரம்’ என்கின்ற உங்கள் வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள் போல.
உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்கள் எல்லாரையும் இன்று காலை சனி மாற்ற விசேட பூஜைக்கு அழைத்திருந்தீர்கள்.
உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று பய பக்தியோடு வணங்கி நின்றார்கள்.
புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்றும் கூறுகிறார்கள். முக்கியமாக மிதுன ராசி காரர்களை (அட்டமத்து சனி) மூச்சு விடக்கூட முடியாமல் மிதித்து ஒருவழி பண்ண நீங்கள் கங்கணம் கட்டி இருப்பதாகவும் கேள்விப்பட்டோம்.
நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் (துலாம்) ஏழாம் வீட்டுக்காரரையும் (கடகம்) போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று வேறு அச்சுறுத்துகிறார்கள்.
இருக்கும் வீட்டையுமே கூட (மகரம்) பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.
அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.
ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.
வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.
அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம் (கும்பம்)
அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது?
பிள்ளைகுட்டிகள் கூட உங்களுக்குப் பயப்படுகின்றன.
உங்களுக்கே தெரியும்… இன்றைய நிலவரப்படி இந்த கொரோனாவால் ஒரு மனிதன் பிழைத்துக் கொள்வதே பெரும்பாடு.
பிழைப்புக்கொரு வேலை பார்த்து, பிடித்தம் போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து, விலை வாசியால் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று, பொடுசுகளுக்கு பள்ளிக்கூடம் நடக்காவிட்டாலும் பள்ளிக் கட்டணம் கட்டி, மனைவி முகம் கோணாதபடி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும் குறையுமாய் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.
இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மியடித்து விடாதீர்கள். சத்தியமா இதுக்கு மேல எங்களால வலி தாங்க முடியாது.
உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் எக்ஸ்ராவா இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும்.
எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா?
எங்களைப் பார்த்தால் ”இரண்டு சாத்து சாத்துவோம்” என்றா உமக்குத் தோன்றுகிறது?
ஏற்கெனவே எங்கள் வாழ்க்கை ஏழெட்டுச் சனிகள் ஏறியிறங்கியது போலத்தானே இருக்கிறது, இதற்கும் மேலுமா எங்களை போட்டுத் துவய்ப்பதற்குத் துணிவீர்கள்?
போதும் போதும்… கொஞ்சம் கருணை காட்டுங்கள்.
வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து, ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக.
வழக்கம்போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக.
இங்ஙனம்,
சனிப்பெயர்ச்சியால் பாதிப்படையும் இராசிக்காரர்களான மிதுனம், துலாம், கடகம், கும்பம், தனுசு மற்றும் மகர ராசி அன்பர்கள்.
(ஒப்பம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)