‘மனிசி வீட்டுக்குப் பக்கத்தில் ஒப்பீஸ் வேணும்‘- பட்டதாரிகளை கிண்டலடித்த வடக்கு ஆளுநர்!!
பட்டதாரிகளில் பலர் சுழலும் நாற்காலியிலிருந்து சுழலும் வேலை செய்வதற்கும், ஓய்வூதியம் பெறுவதற்குமே ஆர்வமாகவிருக்கிறார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி- சுரேன் ராகவன் கிண்டலடித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநரிடம் எழுப்பப்பட்டுள்ள கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கிண்டலாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
17 வருட காலமாக அரச வேலை தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்து ஒருவர் என்னைச் சந்தித்தார்.தொழில் தேடியே வாழ்க்கையைத் தொலைத்து விட்டீர்கள் என அவரிடம் சொன்னேன்.
அரச வேலையும் வேணும், வீட்டுக்கு அருகிலேயே வேலையும் வேணும், திருமணம் முடிக்கப் போகின்ற மனைவியின் வீட்டுக்குப் பக்கத்தில் வேண்டுமென்றால் என்ன செய்வது?
நான் ஆளுநராக வந்ததும் 317 பேருக்கு நியமனம் வழங்கினேன். அவர்களில் 60 பேர் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. வெளிமாவட்டங்களில் நியமனம் கிடைத்தமையால் அவர்கள் பொறுப்பேற்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.