புதினங்களின் சங்கமம்

சுவிஸ் போதகர் சற்குணராஜா மீது ஏன் ஏறிப்பாய்ந்தோம்?

சமூகவலைத்தளம் ஒன்றில் வெளியாகிய பதிவு ஒன்றை அப்படியே  உங்களுக்கு தந்துள்ளோம்….

தயவுசெய்து இந்த விடயத்தை மதவாதத்தோடு தொடர்புபடுத்தாதீர்கள். இந்த முட்டாள்த்தனத்தை யார் செய்தாலும் இதுதான் பதிலாக இருந்திருக்கும். ஒரு மத தலைவராக இருந்து மக்களுக்கு வழிகாட்டிய அந்த போதகர் செய்த தவறுகள் கீழே..

1.முழு உலகுமே தள்ளாடிக்கொண்டு இருக்கின்றவேளை நோய் அச்சுறுத்தல் மிக்கதாக காணப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பயணம் செய்தமை ஒரு தப்பு.

2.இக்கட்டான நிலையில் பயணத்தின் ஒரு நோக்கமாக தன் மதப் பிரசாரத்தை கையிலெடுத்தமை ஒரு தப்பு.

3.மத வழிபாட்டு இடங்கள் வாயிலாகவும் கொரோனா பரவுகின்றது என்பதை அறிந்திருந்தும் தானும் அதை செய்யத் துணிந்தமை இன்னொரு தப்பு.

4.அரசாங்கம் இறுக்கமான நடைமுறையை பின்பற்றுமுன்னரே வெளிநாட்டிலிருந்து வந்து மக்களோடு தொடர்பாடல் செய்யத்துணிந்தமை ஒரு தப்பு.

5.நாட்டுக்கு வந்ததன் பின்னர், முதலாவது நோயாளி அடையாளப்படுத்தப்பட்டபின்னர் பாதுகாப்பு அமைச்சு அறிவித்த உத்தரவை (மார்ச் 1இற்கு பின்னர் நாட்டுக்குள் வந்தோரை உடனடியாக பதிவுசெய்யுமாறு உத்தரவிட்டமை) உதாசீனம் செய்தமை ஒரு தப்பு.

6.தனக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதை உள்ளுணர்வில் தெரிந்திருந்தும் பல அப்பாவிகளோடு எதுவித பாதுகாப்பு ஏற்பாடுகளின்றியும் தொடர்பிலீடுபட்டமை ஒரு தப்பு.

7.பல எதிர்ப்புக்களின் மத்தியிலும் மதக் கூட்டத்தை நடத்தியமை ஒரு தப்பு.

8.பல மத பீடங்களே தலையில் கைவைத்து நிற்கையில், விஞ்ஞானமே விழிபிதுங்கி நிற்கையில் தமக்கு கொரோனா தொற்று வராது என பாமர மக்களுக்கு மிகப்பிழையான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியமை ஒரு பெரிய தப்பு.

9.தனது நோக்கம் நிறைவேறியதும் நாட்டில் நின்றால் தனிமைப்படுத்தலுக்கு ஆளாகவேண்டிவரும் என்ற கள்ள நோக்கில் அடுத்த நாளே நழுவிச் சென்றமை ஒரு தப்பு.

10.அங்கு சென்றதும் தனக்கு கொரோனா இருப்பது உறுதியானபின்பும் தான் தொடர்பை ஏற்படுத்திய நபர்களை தனிமைப்படுத்துமாறு கோராதமை ஒரு தப்பு.

11.தன்னால் நிர்க்கதியாகியுள்ள மக்களை பாதுகாப்பதற்கு தனது மதப்பீடமூடாகக்கூட நடவடிக்கை எடுக்காதமை ஒரு தப்பு.

12.எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னை நம்பி வந்த மக்களையும் அவர்கள் சார்ந்த நாட்டையும் மறந்து தான் படுக்கையில் இருந்தவாறே தனக்காக கர்த்தரிடம் பிரார்த்திக்கும்படி கேட்ட பச்சை சுயநலப்புத்தி மாபெரும் தப்பு.

இப்படி தெரிந்துகொண்டே பல தப்புகளுக்கு மேல் தப்புகளைச் செய்து நாட்டுக்கே பெரும் துரோகத்தை இழைத்திருக்கிறார். இதுவரை குறித்த நோய்க்காரணம் கண்டறியப்படாதிருந்த ஒரு பிரதேசத்தில் நோயைப் பரப்பிய ஒரு கர்த்தாவாகியுள்ளார். இவரா ஒரு மத போதகர்? தன்னை நம்பிய மக்களுக்கு எவ்வளவுபெரிய நம்பிக்கைத்துரோகத்தை செய்திருக்கிறார்.

சில மேதாவிகள், அரசு ஏன் இவருக்கு முற்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை? என கருத்திட்டார்கள். இந்த நோய் பற்றிய எவ்வித முன்னனுபவமும் இல்லாமல் தன்னால் இயன்றதை அரசாங்கம் செய்துவருகிறது. அதற்காக அரசாங்கம் செய்வதெல்லாம் சரி என்று கூறவரவில்லை, ஆனால் இதில் முதற்களத்தில் நின்று பணிபுரிகிற மருத்துவர்களையும், தாதியரையும், சுகாதார ஊழியர்களையும், பாதுகாப்புத்தரப்பினரையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அரசாங்கம் உட்பட இந்த கள ஒழுங்கிலுள்ள எந்த தரப்பு சோர்ந்துபோனாலும் நிலைமை எவ்வளவு பாரதூரமாக மாறும் என்பதை வீட்டிலிருந்து விமர்சிப்போருக்கு புரியாது; தெருக்களில் சுற்றித்திரிவோருக்கு புரியாது.

அரசாங்கம் விதித்த விதிமுறைகளை ஊரடங்கு அமுல்ப்படுத்தும்வரை யாருமே மதிக்கவில்லை. மக்களாகிய நாம் ஒத்துழைக்காவிட்டால் சர்வநாசம் நிகழும்.

போதகரின் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதை மதவாதத்தோடு தொடர்புபடுத்தியவர்கள் அந்த போதகரைவிட பயங்கரமானவர்கள்.