புதினங்களின் சங்கமம்

குற்ற புலனாய்வுத்துறை தலைமை மீது செய் அல்லது செத்து மடி தற்கொலை தாக்குதல் மூலம் இரு பாதாள உலக தலைவர்களை மீட்க முயற்சி!! நடப்பது என்ன? வீடியோ

பாதாள உலக குற்றவாளிகளான நந்துன் சிந்தக எனும் ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷித எனும் குடு சலிந்து ஆகியோரை தப்பிக்கச் செய்ய முன்னாள் இராணுவ கமாண்டோக்கள் திட்டமிட்டுள்ள நடவடிக்கைக்கு “செய் அல்லது செத்து மடி” (Do or Die) என பெயரிடப்பட்டுள்ளதாகவும், குறித்த இருவரையும் இரகசியப் பொலிசாரின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல குறைந்தது 100 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதாக குற்றப்புலனாய்வுப் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த கமாண்டோ வீரர்கள், இந்த “Do or Die” செயற்பாட்டினை அமுல்படுத்தும் போது, ​​பாதுகாப்புப் படையினரின் எதிர்த் தாக்குதலின் போது, ​​தாங்கள் கொல்லப்பட்டால், தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை எப்படிக் கவனிக்க வேண்டும் என்றும் இந்த கொமோண்டோ வீரர்கள் ஒப்பந்தம் வழங்கியோரிடம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை இரகசியப் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து மீட்கும் நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்காக உயர் தொழில்நுட்ப தொலைபேசிகள் மூலம் இந்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு அழைப்புகள் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் இராணுவ கமாண்டோ படையின் விசேட பயிற்சி பெற்றவர்கள் மற்றும் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க பல்வேறு போர் முறைகளை கையாண்டு, பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் சண்டையிட்டவர்கள் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இராணுவ கொமாண்டோ படையினர் போன்று உடை அணிந்து நவீன ஆயுதங்களுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்திற்குள் பிரவேசித்து முதலாவது இரசாயன ஆயுதத் தாக்குதலை மேற்கொள்வதே இந்தக் குழுவின் ஆரம்ப கட்ட நடவடிக்கை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்காக பிரத்தியேக துப்பாக்கிகளை பயன்படுத்த தயாராக உள்ளதோடு, பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தால் எதிர்கொள்ளவும் தயாராக இருந்துள்ளனர்.

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை பாதுகாப்பாக விடுவித்த பின், இந்த குழுவிற்கு பல கோடி ரூபாய் வழங்குவதாக ஒப்பந்ததாரர் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இரண்டு கமாண்டோ படையினரும் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்து “Do or Die” நடவடிக்கையின் மேலதிக தகவல்களைப் பெறுவதே விசாரணையின் நோக்கமாகும்.

இந்தக் குழுவில் மேலும் நான்கு கமாண்டோக்களுடன் சேரவும் குழு தயாராக உள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரபுக்கள் பாதுகாப்பு குழுவொன்றையும் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செயலிழந்திருந்த சிசிடிவி கெமரா அமைப்பும் இதன் காரணமாக மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.