புதினங்களின் சங்கமம்

இலங்கையில் பெருந்தோட்டங்களை கபளீகரம் செய்யத் தயாராகும் ‘பாம் ஒயில்’ தாவரச் செய்கை

‘பாம் ஒயில்’ தாவரச் செய்கையினால் மலையகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு எற்படுப்போகும் ஆபத்து!
————————————————————————
இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளை இல்லாது செய்து, முள் தேங்காய் (கட்டுப்பொல்) என்று அழைக்கப்படும் ‘பாம் ஒயில்’ தாவரச் செய்கையை பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது செய்து வருகின்றன என செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முள் தேங்காய் செய்கை, இலங்கை அரசாங்கத்தின் பூரண அனுமதியுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனங்கள் தரப்பில் கூறினாலும் முள் தேங்காய் செய்கையை இடைநிறுத்தி வைக்க அரசு முன்பு முடிவெடுத்துள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.

மலையகத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இறப்பர், தேயிலை போன்ற செய்கைகளை இல்லாது செய்து இந்த முள் தேங்காய் சாகுபடிக்கு நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இது பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் அவர்களுக்கு கூடுதல் ஊதியம் தரவும், இறப்பர் மற்றும் தேயிலையைவிட அதிக இலாபம் தரும் பயிர்ச் செய்கையை நோக்கி நகரும் முயற்சி என்றும் நிறுவங்கள் தரப்பு கூறுகிறது.

முள் தேங்காய் சாகுபடியை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி கேகாலை பகுதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது பாரம்பரிய தொழிலாகவுள்ள இப்பர், தேயிலை போன்ற செய்கைகளை இல்லாது செய்து, முள் தேங்காய் சாகுபடியை மேற்கொள்ளும் நிறுவனங்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முள் தேங்காய் செய்கை காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாக பெருந்தோட்ட தொழிலாளியான யட்டியந்தோட்டை பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் கணபதிபிள்ளை தெரிவிக்கின்றார்.

”முள் தேங்காய் நடுவதனால், எமது தோட்டப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு வேலை இல்லாது போகின்றது. இந்த மரங்களினால் எந்தவித பயனும் கிடையாது. இந்த மர நடுகையினால் தண்ணீருக்கான தட்டுப்பாடு ஏற்படும். எதிர்காலத்தில் நாம் பாதிக்கப்படுவோம். வரட்சி ஏற்படக் கூடிய நிலைமைதான் இருக்கின்றது. தோட்ட மக்கள் பெரும் கஷ்டத்தில் தான் இருக்கின்றோம். எதிர்காலத்தில் இன்னும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிவரும்” என வேலாயுதம் கணபதிபிள்ளை தெரிவிக்கின்றார்.

சூழலுக்குப் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த செய்கையை உடனடியாக நிறுத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும், நிறுவனங்கள் அந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தாது தொடர்ந்தும் முள் தேங்காய் செய்கையை முன்னெடுத்து வருகின்றன.

குறைந்த காலத்தில் அதிகளவிலான இலாபங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நிறுவனங்கள் இந்த பயிர் செய்கையை மேற்கொண்டு வருவதாக ஈர வலய வனப் பகுதிகளைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜயந்த விஜேசிங்க தெரிவித்தார்.

முள் தேங்காய் சாகுபடியின் ஊடாக இலங்கையின் தென்னை சாகுபடிக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 1990ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களினால் மரக்கறி எண்ணெய் என்ற பெயரில் பாம் ஆயில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இந்த பாம் ஒயில், முள் தேங்காய் மரங்களின் ஊடாகவே பெற்றுக் கொள்ளப்படுவதாகவும், அந்த பாம் ஒயில் வகையை பிரபல்யப்படுத்தும் நோக்குடனேயே மரக்கறி எண்ணெய் என்ற பெயரில் இது சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

தேங்காய் எண்ணெய் பயன்பாட்டின் ஊடாக இதய நோய்கள் ஏற்படுவதாக 1990ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் பிரசாரங்களை செய்து, பாம் ஒயிலை நாட்டு மக்களுக்கு அதிகளவில் விற்பனை செய்யும் முயற்சிகளில் நிறுவனங்கள் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முள் தேங்காய் செய்கை காரணமாக, இலங்கையின் தென்னைச் செய்கை பெருமளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்

முன்னதாக காலப் பகுதியில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் மெற்றிக் தொன் வரை தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்த இலங்கை, தற்போது 40 ஆயிரம் மெற்றிக் தொன் வரையான தேங்காய் எண்ணெயையே உற்பத்தி செய்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

எனினும், ஒரு இலட்சம் மெற்றிக் தொன் பாம் ஒயில் தற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் (metric ton) பாம் ஒயில் இறக்குமதியை நிறுத்தி, உள்நாட்டிலேயே அதனை உற்பத்தி செய்யும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜயந்த விஜேசிங்க கூறினார்.

முள் தேங்காய் செய்கையானது, வனங்கள் அழிவடைவதற்கான முக்கிய காரணியாக மாற்றம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஈர வலய பகுதிகளில் செய்கை செய்யப்பட்டுள்ள இறப்பர் சாகுபடியை அழித்து, அந்த இடங்களில் முள் தேங்காய் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறு வனப் பகுதிகள் அழிக்கப்படுவதன் ஊடாக பாரிய பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக அவர் கவலை வெளியிடுகின்றார்.

இந்த செய்கையின் ஊடாக இ லாபம் அதிகளவில் கிடைக்கின்ற போதிலும், சுற்று சூழல் முற்றாக அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இலங்கையிலுள்ள ரப்பர் செய்கைகள் அனைத்தும் இல்லாது செய்யப்பட்டு, முள் தேங்காய் செய்கை இருந்தால், இலங்கைக்கு அது பாரிய அழிவை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.