பிருத்தானியாவில் முறையான விசா ஆவணங்கள் இன்றி அல்லது Cash in hand எனப்படும் ரொக்கப்பணம் பெற்றுக் கொண்டு வேலை செய்பவர்களைக் கண்டறியும் சோதனைகளை உட்துறை அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உணவகங்கள், ஹோட்டல்கள், கார் கழுவும் நிலையங்கள், சலுான்கள், மற்றும் உரிமம் பெறாத சிறு கடைகளில் இச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சமீப காலமாக இத்தகைய சோதனைகள் மற்றும் கைதுகளின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. லண்டனில் மட்டும் பெருமளவான தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோத வேலை வாய்ப்புக்களுக்கு எதிரான சோதனைகள் 77 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக கைது நடவடிக்கைகளும் கடந்த காலத்தை விட 83 சதவீதம் உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8000 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக எண்ணிக்கையான நபர்கள் ஏற்கனவே தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். விசா இன்றி பிருத்தானியாவில் எளிதாக வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணமே சட்டவிரேத குடியேறிகள் நாட்டிற்குள் நுழைய முக்கிய காரணமாக அமைகின்றது.
இந்த சங்கிலியை உடைக்கும் நோக்கில் லண்டன் வொஸ்மிக்லான் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து போன்ற பகுதிகளில் கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வணிக நிறுவனங்களில் சட்டவிரோத தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றார்களா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் உட்துறை அலுவலகம் தற்போது ரிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் கணக்குகளைத் தொடங்கியுள்ளது.
சோதனைகள் மற்றும் நாடு கடத்தல் தொடர்பான வீடியோக்களை அதில் பதிவேற்றுவதன் மூலம் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அரசு எடுத்து வரும் கடுமையான முயற்சிகளை வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றது. எனவே விசா இன்றி பணியிலிருப்பவர்கள் மற்றும் அவ்வாறனவர்களை வேலைக்கு அமர்த்தும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரொக்கப்பணத்திற்கு ஆசைப்பட்டு விசா இன்றி வேலை செய்பவர்கள் பெரும் சட்டச் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.





