புதினங்களின் சங்கமம்

கடந்த 5 மாத காலப்பகுதியில் ஜேவிபியின் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் பேசவேவில்லை!!

கடந்த 5 மாத காலப்பகுதியில் ஜேவிபியின் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் பேசவேவில்லை
சம்பூரில் 308 ஏக்கர் விவசாய நிலங்கள் உட்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட 603 ஏக்கர் நிலபரப்பை முதலீடு என்கின்ற போர்வையில் இந்தியாவிற்கு தாரைவார்த்த போது பேசவில்லை
மேய்ச்சலுக்காகவும், இருப்புக்காகவும், விருத்திக்காகவும் மீன்கள் வந்து நடமாடும் கடற்காணிகளை கடலட்டை பண்ணை என்கிற பெயரில் முறை தவறி வழங்கும் செயல்கள் தொடருகின்ற போதும் பேசவில்லை
மன்னார் காற்றாலை மின் திட்டம் , கனிய வள அகழ்வு உட்பட்ட விவகாரங்களில் திரு அனுர குமார திஸநாயக்க முன்னுக்கு பின் முரணாக உளறி வருகின்ற போதும் பேசவில்லை
மட்டக்களப்பு பொருளாதாரத்தின் ஆதாரமான மயிலத்தமடு, மாதவனை மீதான ஆக்கிரமிப்புகள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற போதும் பேசவில்லை.
வன்னியின் விவசாய பண்ணைகளை ஆக்கிரமித்து முன்னாள் போராளிகளை பொருளாதாரம் சார்ந்து பண்ணைகளில் கூலி வேலை செய்தால் தான் பிழைக்கலாம் என்ற சூழலை இராணுவம் உருவாக்கி வைத்திருக்கும் அவலம் தொடருகின்ற போதும் பேசவில்லை.
யாழ்ப்பாணத்தில் வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன வள திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாகவிருப்பதாக ஆளுநர் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும் கூட பேசவில்லை.
ஆனையிறவு உப்பளத்தில் உள்ளூர் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை மறுத்து அதன் பெயர்களில் ஜேவிபி அரசியல் செய்கின்ற போதும் பேசவில்லை.
தையிட்டியில் சட்டவிரோத விகாரை வளாகத்தில் மிக புதிய கட்டுமானமொன்று நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட போதும் பேசவில்லை.
கிழக்கு பல்கலைக்கழத்தின் மீயுயர் சபையான பேரவையை சிங்கள மயப்படுத்தி நியமனங்களை செய்திருக்கும் போது பேசவில்லை.
Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி முதல் வெளிநாட்டு சேவை வரை அரச கட்டமைப்புகளில் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்ற போதும் பேசவில்லை.
போர்குற்றவாளிகளை அமைச்சராக , திணைக்கள தலைவராக, பாதுகாப்பு அமைச்சு செயலாளராக ஜேவிபி நியமித்திருக்கும் நிலையிலும் பேசவில்லை.
பலவந்தமாக தமிழர்களை காணாமலாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது திரு அனுரா குமார திஸநாயக்க அறிவித்த பின்னரும் பேசவில்லை.
இலங்கை தீவில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என பகிரங்கமாக பாராளமன்றத்தில் ஜேவிபி வெளிப்படுத்திய பின்னரும் பேசவில்லை.
கடந்த 5 மாத காலப்பகுதியில் 20 இற்கு மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு விசாரணைகளை ஏவிவிட்டிருக்கும் நிலையிலும் பேசவில்லை
சட்டவிரோத குருந்தூர்மலை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரர் ஊடக வவுனியா வடக்கிலிருந்து புதிய பௌத்த தொல்லியல் ஆய்வுகளை தொடங்கிருக்கும் நிலையிலும் பேசவில்லை.
திருகோணமலையில் பாணமுரே திலகவம்ச தேரர் அமைச்சரவை பாதுகாப்புடன் தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கின்ற போதும் பேசவில்லை.
திருகோணமலை 64 ஆம் கட்டை ராஜவந்தான்மலையில் நிர்மாணிக்கப்படும் சட்டவிரோத விகாரை முதல் சட்டவிரோத குருந்தூர் மலை விகாரை கட்டுமானங்கள் தொடருகின்ற போதும் பேசவில்லை.
வசாவிளான் சந்தியிலிருந்து பலாலி T சந்தி வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதியை பயன்படுத்த சட்டவிரோத நிபந்தனைகளை விதித்து பூர்விக மக்களின் தன்மானத்தை விலை பேசுகின்ற போதும் பேசவில்லை.
வடக்கு கிழக்கில் தொழிற் நெறிமுறைகளை மீறி பொலிஸ் அதிகாரிகள் வன்முறைகளை கட்டவிழ்த்தும் விடும் எந்த சந்தர்ப்பத்திலும் பேசவில்லை.
ஆனால் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடுக்கு ஆதாரவாக கை உயர்த்தி விட்டு எந்த பொருளுமின்றி உளறி திரியும் இவர்கள் உள்ளுராட்சி தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க கோருகின்றார்கள்.
நன்றி
இனமொன்றி்ன் குரல்