வடக்கின் கல்வி வீழ்ச்சியடைவதற்கு வடமாகாண அதிகாரிகளே காரணம்!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சிலுள்ள அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால்தான் வடமாகாணக் கல்வி சீரழிகின்றது என்பதை வடக்கு மாகாண ஆளுநரே ஒப்புக்கொண்டிருக்கின்றார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண ஆளுநர் தெரிவித்த விடயம் இதை எடுத்துக்காட்டுகின்றது.
“வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறுகூறி விட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன்.
அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார்.
ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கின்றார்.
இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கின்றது.
எங்களுக்கு பதவிகள் தரப்பட்டது மக்களுக்கு சேவைசெய்யவே. அதை சகல அலுவலர்களும் மனதிலிருத்துங்கள்.
உங்களிடம் சேவைக்காக பொதுமக்கள் வரும்போது, அந்தப் பொதுமகனாக நீங்கள் இருந்தால் எப்படி நடந்துகொள்வீர்கள்? அப்போது உங்களுக்கு பேசுவதற்கு அல்லது மனிதநேயமற்று நடப்பதற்கு மனம்வருமா? எனவே தற்போதுள்ள சகல வசதிகள், ஆளணிகளை வைத்துக்கொண்டு எங்களுக்கு மக்களுக்கு சகலரும் சிறந்த சேவைகளை வழங்க முன்வரவேண்டும், என்றார்.

