புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நிறுத்தம்!!
கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
“விசாரணை முடிவடைந்து இறுதி தீர்மானம் வரும் வரை விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை, அதுவரை பரீட்சை முடிவுகள் வெளியிடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது அவற்றை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
குறித்த பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக தகவல் வௌியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது. முதற்கட்ட விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அதன் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளது உறுதியானால் மீண்டும் பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
“மேலும், விதிகளை பின்பற்றாமல், பரீட்சைக்கு முந்தைய நாட்களில், யூக வினாத்தாள்கள் குறித்து ஆசிரியர்கள் கலந்துரையாடியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இது தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.”
“வினாத்தாள் கசிந்திருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.
இந்த ஆண்டுக்கான பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 323,879 பரீட்சார்த்திகள் அதற்குத் தகுதி பெற்றிருந்தனர்.