புதினங்களின் சங்கமம்

எந்தப் பிள்ளையும் மொக்கனோ மொக்கியோ அல்ல ! புலமைப் பரிசில் பரீட்சை சிறுவர்களையும் பெற்றோரைரையும் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது!!

பெற்றோர்களே !
நீங்கள் கவனயீனமாக இருந்து பிசகினால்
உமது பிள்ளைகளைப்
பிறகு காப்பாற்றமுடியாமல் அவர்களின் இளமையும் கொடுங்கனவாகி
நீங்களும் வருந்தி வருத்தப்பட்டு உங்களின் முதுமையும் கொடுங்கனவாகும் ! அத்துடன் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் சமூகத்திற்குப் பெரும் சுமையாகிப் போவீர்கள்…..!!!!!

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்…. பரீட்சை எழுதிய சகல மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்……வெட்டுப் புள்ளி முக்கியமல்ல……… ஆகக்குறைந்தது 80 புள்ளிகள் இல்லையெனில் நீங்கள் அந்தப் பிள்ளையின் மொழி அறிவு, கணித அறிவு ஆகியவற்றில் வகுப்பு 6 இல் கூடுதல் கவனம் எடுத்து பாடசாலையில் அவ்வகுப்பு ஆசிரியர்களுடன் உரையாடி கணித, மொழி அறிவுகளை மேம்படுத்தி தொடர் வகுப்புக்களில் முன்னேறச் செய்யுங்கள். எந்தப் பிள்ளையும் மொக்கனோ மொக்கியோ அல்ல ! புலமைப் பரிசில் பரீட்சை சிறுவர்களையும் பெற்றோரைரையும் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. சில தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களும் வெளியீட்டாளர்களும் அச்சகங்களும் ஏழைப்பெற்றோரை சுரண்டிக் கொழுக்கின்றன……எங்கள் நாட்டின் அரச கல்வி முறைமை, மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் தனியார் துறைக் கல்வியாகவே மாறிக்கிடக்கிறது. அது ஐந்தாம் ஆண்டில் தொடங்குகிறது ( முன்பள்ளியிலும் பெற்றோர் அங்குமாறி இங்கு மாறி குழந்தைகளை Private Tution Classes க்கு தமது வாகனங்க்களில் காவிக்கொண்டு அலைகிறார்கள் ) யாழ். நகரிலுள்ள உயர்தர வகுப்புக்களுக்கான தனியார் கல்வி நிலையங்களில் ஒரு Class இல் 1200 மாணவர்கள் படிக்கிறார்கள். அரச கல்வி த் திட்டத்தில் ஒரு வகுப்பில் 30-35 மாணவர்கள் மட்டுமே சுற்று நிருபத்தின்படி அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் கல்வித்துறைக்கு பெற்றோர்களும் பிள்ளைகளும் கொடுமையான பயிற்சிக்கு உட்படுவது ஸ்கொலசிப் வகுப்புக்களில் ஆகும். இலங்கையின் கல்விச் சட்டங்கள், நியமங்கள், விதிகள், ஒழுங்குகளுக்கு மாறாக இங்கு முதலாம் வகுப்பிலிருந்து A/L வரை தனியார் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. மாணவ மாணவியரின் உடல்- உள ஆரோக்கிய சீரழிவுகள் மற்றும் நடத்தைத் திரிபுகள் மூன்று இடங்களில் நடைபெறுகின்றன….
1) அவர்களின் வீடுகளில்
2) தனியார் கல்வி நிலையங்களில்
3) பாடசாலைகளில்

இதில் என்ன நடைபெறும் என்றால் மூன்று இடங்களிலும் ஒரு தரப்பு மறு தரப்பில் பொறுப்புக்களைப் போட்டு தப்பிக் கொள்ளும். சீரழிவற்ற ஒழுக்கமான குடும்ப ங் களிலிருந்து வெளிவரும் மாணவ மாணவியரும் உடல்- உள ஆரோக்கிய சீரழிவுகள் மற்றும் நடத்தைத் திரிபுகளை அனுபவிக்கும் நிலை தனியார் கல்வி நிலையங்களால் ஏற்படுகின்றன.

உங்கள் பிள்ளைகளைப் பற்றி இனிமேல் தான்( தரம் 6இல் இருந்து) பெற்றோர் மேலதிக அக்கறையுடனும் விழிப்புடனும் செயற்படவேண்டும்.

பதின்ம வயதும் புதிய பாடாசாலைச் சூழலும் போதைவஸ்த்து மயப்பட்டுள்ள கேடான சூழலும் தற்போதய ஒழுக்க விழுமியங்களை இழந்த கட்டுப்பாடற்ற பாலியல், சமூகப்பழக்கவழக்கங்கள் மிக்க மனிதர்கள் நிறைந்த சமூகமும் தொழில் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அற்ற சுய நலம் நிறைந்த வர்த்தகச் சுரண்டல்கள், மோசடிகள் நிறைந்த ஆசிரியர்களும், அதிபர்களும், கல்வி அதிகாரிகளும் கணிசமான தொகையினர் உருவாகியுள்ளமையும் பாடசாலைகள் வர்த்தகமயப்பட்டு வருவதால் விளையாட்டுக்களுக்கும் அனாவசியமான விழாக்களுக்கும் அசாதாரணமுறையில் அதீத முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை அதற்குள் திணித்தலும், மலசல கூட வசதிகள் பொருத்தமற்று அல்லது பற்றாக்குறையாக நீர் வினியோகமிழந்து இருத்தல், சுத்தமான குடி நீர் வசதிகள் அற்றிருத்தல் ஆகிய நிலைமைகள் உங்கள் பிள்ளைகளில் வெவ்வேறு வகையில் மெல்ல மெல்ல தாக்கம் செலுத்தத் தொடங்கும்.

அதனால் பெற்றோர்களாகிய நீங்கள், பிள்ளைகளுடன் தினமும் பாடசாலையிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் படித்த விடயங்களையும் நடந்த விடயங்களையும் நட்புரீதியாக சிரித்துக் கதைத்து உரையாடி, விடயங்களை உள்வாங்கி அவர்களுக்கு ஆலோசனை- வழிகாட்டல் செய்யவேண்டும்….

அத்துடன் ஒவ்வொரு பாடக் கொப்பிகளையும் ஒவ்வொரு நாளும் பெற்றோர் பார்க்கவேண்டும். பிள்ளைகளிடம் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையம் ஆகியவற்றில் எழுதும் நோட்ஸ், செய்யும் பயிற்சிகள் ஆகியவற்றை ஒவ்வொரு நாள் திகதியிட்டு எழுதச் சொல்லுங்கள். அவ்வாறு எழுதினால் நீங்கள் கண்காணிப்பதற்கு இலகு.

அத்துடன் பிள்ளையின் பாடசாலைக்குச் சென்று ஒவ்வொரு வகுப்பிலும் பிள்ளையின் வகுப்பாசிரியரின் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் எடுத்து வைத்திருங்கள்…தேவை ஏற்படும்போது வகுப்பாசிரியருடன் பயப்படாமல் கதையுங்கள். அதிபரின் இலக்கத்தையும் பெற்று வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு தவணையும் பிளையின் தேர்ச்சி அறிக்கை வழங்கும் கூட்டத்திற்கு பாடசாலையால் பெற்றோர் அழைக்கப்படும்போது தவறாமல் செல்லுங்கள். உங்கள் அவதானிப்பு க் களையும் கருத்துக்களையும் சுமுகமான முறையில் வகுப்பாசிரியரிடமும் பாட ஆசிரியர்களிடமும் கூறுங்கள்.

கணிதம், தாய்மொழி( தமிழ்), விஞ்ஞானம், IT, ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பிள்ளைகள் போதிய கவனம் எடுப்பதை உறுதிப்படுத்துங்கள்…
எப்பொழுதும் அப்பாடங்களில் பிள்ளையின் கற்றல் செயற்பாட்டையும் அக்கறையையும் ஊக்குவிக்கவும்.

பிள்ளையின் கல்வி, பிள்ளையின் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய உட் சூழல் மற்றும் புறச்சூழல் ஆகியவற்றை தொடர்ந்து அவதானிப்பு க்குள் வைத்திருத்தல், பிள்ளையின் சக மாணவ மாணவியர் அவர்களின் பெற்றோர் பற்றிய விபரங்களை அறிந்திருத்தல், பிள்ளையின் பாடசாலைக்கும் தனியார் கல்வி நிலையத்துக்குமான பயணமுறைமை( சைக்கிளா? பெற்றோரின் வகனங்களா? பொதுப் போக்குவரத்தா?), பயணப் பாதை ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியன பெற்றோரால் அல்லது பிள்ளையின் பாதுகாவலர்களால் நிறைவு செய்யப்படவேண்டும்.

கல்வி நோக்கங்களைத் தவிர, எக்காரணம் கொண்டும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக கைத்தொலை பேசியை பிள்ளையிடம் கொடுக்காதீர்கள். கல்வி நோக்கங்களும் உங்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும்.

இவை , பிள்ளை 6 ம் வகுப்புத் தொடங்கி
GCE(A/L)படித்து முடிக்கும் வரைக்குமான பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்குமான அறிவுரைகளும் ஆலோசனைகளும் ஆகும்.

ஆக்கம் : க.வேல்தஞ்சன்- BA, MPA, Dip. in Journalism, Dip.in Human Rights
Visiting Academic- OUSL,
News Analyst( Freelancer)