சுவிஸ் காமுக அங்கிளிடம் ரிக் டொக் வீடியோ அனுப்பி 45 லட்சம் சுருட்டிய 3 யாழ் பெண்கள் கைது!!
ரிக் ரொக் வீடியோக்களை அனுப்பி, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் 52 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 45 இலட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் தற்போது சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவரது வாட்ஸ் அப் இலக்கத்திற்கு அழகிய பெண்ணொருவரின் ரிக் ரொக் வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தத் தொடர்பாடல் இறுக்கமடைந்த பின்னர், அந்தப் பெண் பல்வேறு தேவைகளைக் கூறி சுவிஸில் உள்ளவரிடம் பணம் பெற்றிருக்கின்றார்.
டிக்டொக் கணக்கு உள்ள அதே பெயரைக்கொண்ட வங்கிக் கணக்குக்கே இந்தப் பணப் பறிமாற்றம் நடந்திருக்கின்றது. சுவிஸில் உள்ளவரும் சுமார் 47 லட்சம் ரூபா வரையில் கொடுத்திருக்கின்றார்.
அதன்பின்னர் அந்தப் பெண்ணின் தொடர்பாடல்கள் குறைய ஆரம்பித்துள்ளன. ஒரு கட்டத்தில் சுவிஸில் உள்ளவருக்கு சந்தேகம் ஏற்பட, அவர் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருக்கின்றார்.
யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணறோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிக்டொக்கில் உள்ள பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில் அவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்திருக்கின்றது.
அதையடுத்து வங்கிக் கணக்கு இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கைது செய்தனர்.
அந்தப் பெண்ணின் பெயரும், முதலெழுத்தும் டிக்டொக் கணக்கு வைத்திருக்கும் இளம்பெண்ணின் பெயர் முதலெழுத்தும் ஒன்றாக இருந்தன.
அவரது வங்கிக்கணக்குக்கே பணம் மாற்றப்பட்டுள்ளபோதும், சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் தொடர்பாடலை மேற்கொண்டவர் அவர் இல்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது. தொடர் விசாரணையில் 47 வயதுடைய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார்.
அவரே சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் இளம் பெண் போன்று உரையாடிப் பணத்தைக் கறந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்தது. அத்துடன், இவர்களின் ‘அன்ரி’ என்று அடையாளப்படுத்தப்பட்ட இன்னொருவருக்கும் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள். ரிக்ரொக் பெண்ணின் பெயரும், தனது நண்பியின் பெயரும் ஒன்றாக இருப்பதைப் பயன்படுத்தி 47 வயதுப் பெண் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
சுவிஸ் நாட்டில் உள்ளவர் முன்னொரு தடவை யாழ்ப்பாணம் வந்தபோது, கிடைத்த அறிமுகத்தைக் கொண்டே அந்தப் பெண் திட்டம் தீட்டிப் பணத்தை கறந்துள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, பணத்தை மீள வழங்குவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர்களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.