யுவதியைக் கடத்தி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாக வல்லுறவுக்கு உள்ளாக்கி அவுஸ்ரேலியாவுக்கு தப்பி ஓடியவன் பிடிபட்டது எப்படி?
பெண்ணொருவரை கடத்திச் சென்று முச்சக்கரவண்டியில் வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்த குற்றவாளி அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்று திரும்பும் போது மற்றுமொரு குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டதையடுத்து பழைய விடயம் தெரியவந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளிய, முக்குதொடுவாவ பகுதியைச் சேர்ந்த விஜீத் லக்மால் பெரேரா என்ற 42 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2010ஆம் ஆண்டு, குறித்த நபர் தனது நண்பருடன் இணைந்து 24 வயதான பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முந்தல் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இந்த இரண்டு சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் திருகோணமலையில் மீன்பிடி படகை கடத்தி அவுஸ்திரேலியாவிற்கு வேறு குழுவுடன் சென்றுள்ளதாக அறியமுடிகின்றது. அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற சந்தேகநபர் ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு திரும்பி கொழும்பு பிரதேசத்தில் தங்கியிருந்து பின்னர் அண்மையில் முக்குதொடுவாவ பகுதிக்குத் திரும்பினார்.
மற்றுமொரு குற்றச் செயல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மதுரங்குளிய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து விசாரணை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாலியல் வல்லறவு குற்றச்சாட்டு விவகாரம் அம்பலமானது.
அப்போது, சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றமையினால், புத்தளம் நீதிமன்றத்தில் நடந்த பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்தமை தொடர்பான வழக்கு இலக்கமான எச்.சி-17/2011 இன் கீழ் மேலதிக குற்றச்சாட்டுகளை பதிவு செய்து குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. மூன்று குற்றச்சாட்டுகளில் அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த நபர் இந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிபதி திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தார். வழக்கில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜராகியதால், அவர் தொடர்புடைய குற்றத்திற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டார்.
மதுரங்குளிய பொலிஸார் குறித்த நபரை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்தனர்.