Vampan memes

மாவை, விக்கியை துரத்திய குடிகாரன்!! யாழ் பல்கலைக்கழக பேரணியில் பதற்றம்!!

பல்கலைகழக மாணவர்கள் இன்று நடத்திய பேரணியில், மதுபோதைய ஆசாமியொருவர் குழப்பம் நிகழ்த்தியதால், கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்கள் சங்கடப்பட நேர்ந்துள்ளது.

இந்த குழப்பத்தையடுத்து, முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் போராட்டத்திலிருந்தும் வெளியேறினர். சர்வதேசத்திடம் நீதி கோரி யாழ் பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்த போராட்டம் இன்று
இடம்பெற்றது. பல்கலைகழக வளாகத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி, யாழ் முற்றவெளியை அடைந்தது.

யாழ் பல்கலைகழகத்தில் பேரணி ஆரம்பிக்கவிருந்த சமயத்தில், வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் அங்கு நின்றனர். அப்போது ,தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா அங்கு வந்தார். விக்னேஸ்வரனும், மாவையும் நேருக்கு நேர் சந்தித்து
கொண்டனபோது இருவரும் சிரித்தபடி கைலாகு கொடுத்து, பரஸ்பரம் சுகம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது, ஒருவர்- மதுபோதையில் இருந்தார் என போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் அப்பிராயம் தெரிவித்தனர்- அங்கு வந்து அநாகரிக்கமாக நடந்து கொண்டார்.

மாவை- விக்னேஸ்வரன் கைலாகு கொடுத்து, சிரித்ததை பார்த்து, “இங்கு சிரிப்பதற்காக வந்தீர்கள்? நீங்கள் எல்லாம் எதற்காக வருகிறீர்கள்? இது நாங்கள் ஏற்பாடு செய்த போராட்டம். பின்னால் போங்கள்..“ என அநாகரிகமாக சத்தமிட்டார்.

இதன்போது பிற தலைவர்களான செ.கஜேந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், த.சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பிற தலைவர்களும் அந்த இடத்தில் நின்றனர். திடீரென நிகழ்ந்த இந்த சம்பவத்தையடுத்து, தலைவர்கள் பின்பக்கமாக நழுவி சென்றனர்.

பேரணி நகர, தலைவர்கள் அப்படியே நின்று,பேரணியின் பின்னால் சிறிது தூரம் சென்றனர். சிறிது தூரத்தின் பின்னர் மாவை சேனாதிராசா, க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் போராட்ட இடத்திலிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

இதேவேளை, மதுபோதையில் குழப்பத்தை ஏற்படுத்திய ஆசாமி, இலங்கை காவல்துறையில் இருந்தவர் என்றும், பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.