புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் ஐயப்பக் கடவுள் நேரில் தோன்றினாராம்!! (வீடியோ)

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் கடவுள் தோன்றினார் என சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது.

அண்மைக்காலங்களில் வடக்கு கிழக்கில் கடவுள் சிலை அரசியல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பௌத்த ஆக்கிரமிப்பு வடிவமாக புத்தர் சிலைகள் சிங்கள தரப்பினால் வைக்கப்பட்டு வருகிறது.

பதிலாக, தமிழ் தரப்பில் திட்டமில்லாத உதிரி நடவடிக்கைகளாக, நமது பாரம்பரிய மண்ணில் சைவ சிலைகளை நாமே வைத்துவிட்டு, “திடீரென முளைத்த சிவலிங்கம்“, “தானாக தோன்றிய அம்மன் சிலை“ என செய்திகளை வெளியிட்டு சுயஇன்பம் கண்டு கொண்டிருக்கிறோம்.

இந்த வகையில் கிளிநொச்சி, உமையாள் புரத்தில் நேற்று முன்தினம் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள ஒருவரின் கனவில் கடவுள் தோன்றி, குறிப்பிட்ட இடமொன்றில் நாளை உனக்கு அற்புத காட்சி தெரியும், பெரும் பொக்கிசம் கிடைக்குமென கூறப்பட்டதாக, அவரே கூறினார்.

பின்னர் நேற்று முன்தினம் மாடு மேய்க்கச் சென்ற போது, நிலத்துக்குள்ளிருந்து ஐயப்பன் சிலை ஒளிவெள்ளத்துடன் மேலெழுவதை கண்டதாகவும், அங்கு சென்ற போது ஐயப்பன் சிலையொன்று காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த சிலையை வைத்து அங்கு கோயில் கட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்றவர்கள், அந்த சிலை தொன்மையானதாக தெரியவில்லையென்றனர். சில வருடங்களின் முந்தைய சிலையென்பது முதல் பார்வையிலேயே தெரிவதாக குறிப்பிட்டனர்..

கோயிலை வருமானமீட்டும் தொழிலாக மேற்கொள்ளும் பலர், இவ்விதமான தகவல்களை பரப்பி, கோயில் கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.