FEATUREDLatestVampan memesபுதினங்களின் சங்கமம்

தியாகி அறக்கொடை பல்பொருள் அங்காடிக்கு சென்ற இருவருக்கு நடந்த அலங்கோல வேலை!! தியாகியும் விளையாட்டு காட்டுறார்!!

கடந்த சித்திரவருடப்பிறப்பு அன்று இரவு யாழ் நாவலர் வீதியில் உள்ள தியாகி பல்பொருள் அங்காடிக்கு (TCT) சென்ற இரு வாடிக்கையாளர்கள் அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்களால் தரக்குறைவாக நடாத்தப்பட்டு கேலமான வார்த்தைகளைப் பாவித்து துரத்தப்பட்டுள்ளார்கள். குறித்த பணியாளர்களுககு ஆதரவாக TCTக்குப் பொறுப்பாயிருந்தவரும் நடந்து கொண்டதாகத் தெரியவருகின்றது. வருடப்பிறப்பு அன்று இரவு வேளை குறித்த அங்காடி வழக்கமாக பூட்டப்படும் நேரத்துக்கு முன்னதாக பூட்டுவதற்கு ஆயத்தமான வேளையில் அது தொடர்பாக அறியாத இரு நடுத்தர வயதான ஆண்கள் அங்கு பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு சென்றுள்ளனர். ஆனால் கடைக்கு உள்ளே செல்வதற்கு பாதுகாப்புக் கடமையில் நின்ற ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. கடை மூடப்படவுள்ளது. இனி உள்ளே செல்ல முடியாது என கூறியுள்ளார்கள். ”வழக்கமாக குறித்த நேரத்திலேயே நாங்கள் வந்து பொருட்கள் கொள்வனவு செய்துள்ளோம். இன்று மட்டும் இவ்வாறு பூட்டுவது எமக்கு தெரியாது.நாம் சற்றுத் தொலைவில் இருந்து வந்துள்ளோம். உடனடியாக பொருட்களை கொள்வனவு செய்வு வெளியேறுகின்றோம்” என குறித்த வாடிக்கையாளர்கள் கூறியும் ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. குறித்த இரு வாடிக்கையாளர்களையும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் ஏசி மனிதாபிமானற்ற முறையில் அவர்களை வெளியேற்றியுள்ளார்கள் குறித்த கடையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் ஊழியர்கள். இவ்வாறு அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட போது அங்கு வந்த கடைக்குப் பொறுப்பானவரும் ஊழியர்களுடன் சேர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த வாடிக்கையாளர்களை ஏசித் துரத்தியதாக அங்கு நின்ற சிலர் தெரிவித்துள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய வியாபார நிலையாமான குறித்த வர்த்தக நிலையத்தில் இவ்வாறான பிற்போக்குத்தனமான ஊழியர்களும் பொறுப்பாளரும் இருக்கின்றார்கள் என்றால் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதே நிலைப்பாட்டை கொண்டிருப்பார் என்பதை கருத்தில் எடுக்க வேண்டும். அண்மையில் அவரது பிறந்ததினம் என தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகளை வெளிமாவட்டங்களில் இருந்தும் வரவழைத்து நடு வீதியில் நடு வெயிலில் பல மணி நேரம் காத்திருக்கச் செய்து அவர்களுக்கு சில ஆயிரக்கணக்கான பெறுமதி வாய்ந்த பொருட்களைக் கொடுத்து தனது பிறந்ததினத்தை கொண்டாடி பலரையும் விசனப்படுத்தியிருந்தார் குறித்த தியாகி.

நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான லாபம் ஈட்டும் அந்த வர்த்த நிலையத்தின் வருமானத்தில் அரசுக்கு கொடுக்கும் வரியை இல்லாமல் செய்வதற்காக தியாகி இவ்வாறான கொடை நடவடிக்கைகள் பலவற்றை செய்து வருவதை பொதுமக்கள் அறிய மாட்டார்கள். தியாகி குறித்த வர்த்த நிலையத்தை மட்டுமல்ல வேறு சில வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளையும் செய்து வருகின்றார். அதில் அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் வரியை விலக்களிக்கச் செய்வதற்காகவே இவ்வாறான உதவிகளை பொதுமக்கள்,வறிய மக்கள் என கூறி அவர்களுக்கு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தியாகி மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டில் பெரும் வருமானம் பெறுபவர்களும் இவ்வாறான வரி விலக்குகளுக்காகவே அறக்கொடை செய்து வருகின்றார்கள். சிலர் தாமே அறக்கொடை நிறுவனங்களை ஏற்படுத்தி அவற்றின் ஊடாக வரி விலக்கு பெறுவதற்கு பலருக்கும் உதவி புரிவது ஏராளமானவர்களுக்கு தெரிவதில்லை.

தென்பகுதி வர்த்தக நிறுவனங்கள் தம்மிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மதிப்புக் கொடுத்தே செயற்பட்டு வருகின்றார்கள். அவ்வாறான வர்த்தக நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நிறுவன ஊழியர்களால் அசௌகரியங்கள் ஏற்பட்டால் குறித்த நிறுவன நிர்வாகி அல்லது பொறுப்பானவர் அந்த ஊழியர்களைக் கொண்டே மன்னிப்பு கேட்கச் செய்யும் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன.

ஆனால் யாழ்ப்பாணத்தில் அப்படி அல்ல. யாழில் தியாகி பல்பொருள் அங்காடி மட்டுமல்லாது பல்வேறு வர்த்த நிலையங்களும் தம்மிடம் வரும் வாடிக்கையாளர்களை கவருவதில் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக அவர்களை வெறுப்பேற்றுவதிலேயே குறியாக உள்ளார்கள். சாதாரணமாக ஒரு சாப்பாட்டு கடைக்கு சென்று அங்கு சாப்பாட்டில் ஏதாவது குறையைக் கண்டு பிடித்தாலும் அங்குள்ள ஊழியர்கள் முதல் முதலாளி வரை குறை கண்டு பிடித்தவரை அச்சுறுத்துவதிலேயே முன்னிலையில் நிற்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு முஸ்லீம் முதலாளியின் கடைக்கு செல்வதற்கும் ஒரு தமிழ் முதலாளியின் கடைக்குச் செல்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அனுபவப்பட்டவர்களுக்கு அது புரியும். முஸ்லீம் கடைகளில் உள்ளவர்களின் வரவேற்பான பேச்சும் மற்றும் கவர்ச்சிகரமான வியாபார நுணுக்கங்கள் எதுவும் தமிழ்கடைகளை நடாத்தும் முதலாளிகள், ஊழியர்களிடத்தில் இல்லை.

“வந்தா வா, போனால் போ“ என்றவாறான செயற்பாடே அவர்களிடத்தில் காணப்படுகின்றது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடைகள், ஹாட்வெயர் கடைகள் மற்றும் பல கடைகளில் நடக்கும் பல்வேறுவகையான மோசடி வியாபாரங்களும் அவர்களை விட்டு வாடிக்கையாளர்கள் விலத்தும் செயற்பாடுகளை அதிகரிக்கின்றது.

இவ்வாறான ஏராளமான தவறான செயற்பாடுகளை யாழ் வர்த்தகர்கள் நிறுத்தும் வரை யாழ்ப்பாண வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகள் தென்பகுதி மற்றும் முஸ்லீம் வர்த்தகர்களின் கைகளில் பலத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் இல்லை எனலாம்.

வம்பன்