புதினங்களின் சங்கமம்

வடக்கு மாகாண ஆளுநரால் ஆப்பு வைக்கப்பட்டார் யாழ் பெரியாஸ்பத்திரி பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பதவி வகித்தபடி, யாழ்ப்பாண பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் இரட்டை பதவி வகித்த வைத்தியர் த.சத்தியமூர்த்தி
தொடர்பான சர்ச்சைக்கு வடக்கு ஆளுனர் தீர்வு கண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளராக த.சத்தியமூர்த்தி செயற்பட ஆளுனர் தடை விதித்துள்ளார்.

மாகாண அமைச்சின் நிர்வாகத்திற்குட்பட்ட, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
பதவியில், மத்திய அரசிற்குட்பட்ட பணியாளரான யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்
த.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு வடக்கின் அனேக அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர். மத்திய அரசு, மாகாண நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் முயற்சியென
விமர்சித்தினர். வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இது குறித்து ஆளுனருக்கு கடிதம்
எழுதினார். தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தொலைபேசியில் ஆளுனருடன்
பேச்சு நடத்தியிருந்தார்.

ஏற்கனவே, யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையிலிருந்த ஒருவருடன்,
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் நெருக்கமாக உள்ள யாழ் வைத்தியர் ஒருவர்
முரண்பட்டபோது, அவரை அந்த பதவியிலிருந்து நீக்குவதாக சவால் விட்டு சென்ற சில
வாரங்களில், புதிய நியமனம் நடந்ததால், நிர்வாக மட்டத்திலும் இரண்டுபட்ட கருத்து
ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், சுகாதார அமைச்சின் புதிய நியமனம் மாகாண நிர்வாகத்தில் தலையீடு செய்வதாக
அமைந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள வடக்கு ஆளுனர், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்
பதவியை மாத்திரம் கவனிக்குமாறு, த.சத்தியமூர்த்திக்கு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ் பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் தேவநேசனே, பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடமைகளை கவனிப்பார் என்றும் ஆளுனர், த.சத்தியமூர்த்திக்கு
தெரியப்படுத்தியுள்ளார். எனினும், எழுத்துமூலம் இந்த அறிவித்தலை தந்தால் மாத்திரமே
ஏற்பதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்ததாகவும், அதை தர ஆளுனர்
சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.