மொட்டு கட்சி பெண் உறுப்பினரை அழுகிய முட்டையால் தாக்கி அசிங்கபடுத்திய ஊழியர்கள்..!
அனுராதபுரம் மாநகர சபை ஊழியர்களின் அழுகிய முட்டை தாக்குதல் மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் மொட்டுக் கட்சியின் உறுப்பினர் திருமதி சுரங்கி ரேணுகா சமரதுங்க பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்றையதினம் (26ம் திகதி) மாநகர சபையின் மேயர் எச்.பி.சோமதாச தலைமையில் நடைபெற்ற நிதிக்குழு கூட்டத்தில் மாநகர ஆணையாளர் ருவன் விஜேசிங்கவுடன் மொட்டுக் கட்சி உறுப்பினர் முறுகலில் ஈடுபட்டதுடன், மோசமான வார்த்தைகளால் திட்டி பாதணியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (27ம் திகதி) காலை மாநகர சபைக்கு வந்த சுரங்கி ரேணுகா சமரதுங்கவை அலுவலகத்தில் காத்திருந்த போது, மாநகர சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டதுடன், அவரை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர் அலுவலகத்தில்தொடர்ந்து இருந்ததால் , ஊழியர்கள் கோபமடைந்ததுடன் அவர் அமர்ந்திருந்த நாற்காலியுடன் தூக்கிக்கொண்டு கீழ் தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியிருந்த நிலையில் மாநகர சபையின் நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய ஊழியர்கள் , அவருக்கு எதிராக பல்வேறு சுவரொட்டிகளைக் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சுரங்கி ரேணுகா சமரதுங்க மாநகர சபை உழியர்கள் தன்னைத் தாக்கியதாக அழுது புலம்பியுள்ளார். ஊழியர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன் அவர் மீது அழுகிய முட்டைகளால் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.
