சாமியாரைத் திட்டிய சரா எம்.பி
வலி.மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றபோது இணைத்தலைமை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், கேள்வி கேட்ட சாமியாரைக் கடிந்துகொண்டார்.
வலி.மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி பொ.பிறேமினி தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இணைத் தலைமையில் நடைபெற்றது.
வீதிகள் தொடர்பான விடயம் கலந்துரையாடப்பட்டபோது, யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி இதுவரை புனரமைக்கப்படவில்லை எனவும் இதைப் புனரமைப்பதற்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் சுழிபுரம் கிழக்கு விவசாய சம்மேளனத் தலைவர் கேள்வி எழுப்பினார்.
சமய ஈடுபாடுடைய காவி உடை தரிக்கும் அவர், நேற்றைய கூட்டத்திற்கும் அதே உடையுடன் சென்றிருந்தார்.
பல வீதிகள் காப்பெற் வீதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. வயதான காலத்தில் இந்த வீதியால் நாம் பயணிக்க முடியவில்லை. இந்த வீதிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் நாம் படிக்கின்றோம். கேள்வி கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தியாவிடமா? சீனாவிடமா? கேள்வி கோரப்பட்டுள்ளது? உண்மை நிலையைத் தெரியப்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்த வீதிப் புனரமைப்பிற்கான கேள்வி கோரலின்போது சீனா குறைந்த நிதியில் செய்வதற்கு மனுக்களைச் சமர்ப்பித்திருந்தது. எனினும், இதைச் சீன நிறுவனத்திற்கு கொடுப்பதில் சிலருக்கு விருப்பம் இருக்கவில்லை. இதனால் தாமதம் அடைகின்றது எனக் கூறினார்.
இதன்போது, மேற்படி விவசாய சம்மேளனத் தலைவர், சித்தார்த்தன் எம்.பி புத்தூர் – மாகியப்பிட்டி வீதியைக் காபெற் வீதியாகப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார் என பத்திரிகைகளில் படித்திருக்கின்றோம். அவர் செய்ய முடியுமாயின் நீங்கள் ஏன் செய்ய முடியாது? நீங்கள் முடியாவிட்டால் சொல்லுங்கள், நாம் சித்தார்த்தன் எம்.பியைக் கொண்டு இதைச் செய்கிறோம் என்றார்.
இதனால் கடுப்பாகிய சரவணபவன் எம்.பி “நீங்கள் காவியை உடுத்துக்கொண்டு கண்டபடி கதைக்கக்கூடாது. வேறு நோக்கத்துடன் நீங்கள் இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பதாகத் தெரிகின்றது. கூட்டத்தைக் குழப்பாதீர்கள்” எனக் கடிந்துகொண்டார்.