புதினங்களின் சங்கமம்

யாழில் மின்விளக்குகளுடன் பறந்த பட்டத்தைப் பார்த்து வெருண்ட படையினர்(Photos)

பொன்னாலையில் மின்னொளி பொருத்தப்பட்டு விண் பூட்டப்பட்டு ஏற்பட்ட பட்டத்தைக் கண்ட படையினர் அது ஆள் இல்லாத விமானம் எனக் கருதி சுட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றது.

அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் நேற்று மாலை பற்றரி பொருத்திய டோர்ச் லைற் ஒன்றை பட்டத்தில் பொருத்தி விண் பூட்டி வானத்தில் ஏற்றியிருந்தனர். இரவானதும் அதைக் கீழே இறக்காமல் அப்படியே கட்டிவிட்டு வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

நேற்றிரவு 11.00 மணியளவில் அவ்வீதியால் சென்ற கடற்படையினர் அதை அவதானித்துவிட்டு பரபரப்படைந்தனர். ஆள் இல்லாத விமானம் அது எனக் கருதிய அவர்கள் சுட முயன்றனர். எனினும், அப்பகுதியில் நின்ற சிலர் அது பட்டம் எனக் கூறினர்.

இதையடுத்து பட்டம் ஏற்றிய சிறுவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்பி வந்து பட்டத்தை இறக்குமாறு கூறினர். பட்டம் இறக்கும்போது படையினர் காணொளி மற்றும் ஒளிப்படங்களை எடுத்தனர்.

இனிமேல் இவ்வாறு பட்டம் ஏற்றக்கூடாது என எச்சரிக்கை வழங்கிய பின்னர் குறித்த பட்டத்தையும் தம்முடன் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சில மணிநேரம் பதற்றம் நிலவியது.