புதினங்களின் சங்கமம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல்கைதிகளை துப்பாக்கிமுனையி்ல் முட்டுக்காலில் இருத்திய சிங்கள அமைச்சர்!!

அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை பதவியில் இருந்து நீக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உண்மையில் நடந்தது என்ன?

சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 12ம் திகதியன்று மதுபோதையிலிருந்த நிலையில் தனது நண்பர்கள் புடைசூழ பலாத்காரமான முறையில் வெலிகடை சிறைச்சாலைக்கும் அநுராத புர சிறைச்சாலைக்கும் அத்துமீறி உள்நுழைந்துள்ளதாக த மோர்னிங் பத்திரிகை செய்திவெளியிட்டிருந்தது.

ஆரம்பத்தில் அந்தப்பத்திரிகை சம்பந்தப்பட்ட அமைச்சர் லொஹான் ரத்வத்தை என்று பெயரிட்டிருக்கவில்லை மாறாக பிறர் முன்னிலையில் கைத்துப்பாக்கியைக் காண்பித்து தனது அதிகாரத்தை வெளிப்படுத்தும்கைத்துப்பாக்கியை காண்பித்து பெருமைகொள்ளும் சக்திமிக்க அரசியல் குடும்பத்திலிருந்து வந்த இராஜாங்க அமைச்சர் என்றே குறிப்பிட்டிருந்தது. எனினும் பின்னர் அந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை என்ற பெயர் வெளியாகியது.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அத்துமீறி பிரவேசித்த அமைச்சர் தனது நண்பர்களையும் உள்ளே செல்ல இடமளித்ததுடன் தூக்குமேடைகளைப் பார்வையிடவும் இடமளித்ததாக த மோர்னிங் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த குழுவில் சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தி தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்த அழகிப்போட்டி வெற்றியாளரொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தைச் செலுத்திவந்த அழகிப் போட்டி வெற்றியாளர் ஆண்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலைப்பகுதிக்கு செல்லமுயன்றபோது பெண் என்ற வகையில் அவரால் அங்கு செல்லமுடியாது என சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது இராஜாங்க அமைச்சரும் அவரது நண்பர்களும் தகாத வார்த்தைகளால் சரமாரியாக சிறைச்சாலை அதிகாரிகளை திட்டியதுடன் அந்த அழகிப் போட்டி வெற்றியாளரை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு பணித்துள்ளனர்.

இந்த வேளை இராஜாங்க அமைச்சரும் அவரது நண்பர்களும் குடிபோதையில் இருந்ததுடன் அவர்கள் அரைச் காற்சட்டையையே அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது.

‘ அவர்கள் அதிகமாக குடிபோதையில் இருந்தனர் . அவர்களால் நிலத்தில் நேராக நிற்கக்கூட முடியவில்லை ‘ மோர்னிங் பத்திரிகைக்கு தனது பெயரைக் குறிப்பிடவிரும்பாத சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன எக்க நாயக்கவை அப்பத்திரிகை தொடர்புகொண்டபோது இது பற்றி எதனையும் தாம் அறிந்திருக்கவில்லை எனத்தெரிவித்துள்ளார். இது பற்றி லொஹான் ரத்வத்தையின் ஊடக செயலாளரை அப்பத்திரிகை வினவியபோது ஊடகங்களில் கூறப்படுவது போன்று எந்த சம்பவமும் பதிவாகத நிலையில் இதுபற்றி கருத்துதெரிவிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரக் குமார் பொன்னம்பலம் லொஹான் ரத்வத்தை அநுராதபுர சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்தமையையும் அங்குள்ள தமிழ் சிறைக்கைதிகளை ஓரிடத்தில் கூடுமாறு பணித்து துப்பாக்கிமுனையில் இரண்டு கைதிகளை முழந்தாழிடவைத்ததுடன் துப்பாக்கிமுனையில் அவர்களைக் கொன்றுவிடப்போவதாக அச்சுறுத்தியதாகத் தெரிவித்திருந்தார்.

லொஹான் ரத்வத்தையின் இராஜினாமாவை உடனடியாகக் கோரியிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அவரை உடனடியாக அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இராஜாங்க அமைச்சர் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்திருந்தது.

“செப்டம்பர் 12ம் திகதியன்று அநுராத புர சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அங்கு அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகளை நோக்கி துப்பாக்கியைக் காண்பித்து கொலைசெய்வேன் என அச்சுறுத்தல் விடுத்ததமை தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கப்படவேண்டும். அத்தோடு அவர் கைதுசெய்யப்பட்டு முறையாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவேண்டும்” எனவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உடனடியாக விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனக் கோரியுள்ளதுடன் நீண்டகாலமாக வலியுறுத்தப்படும் சிறைச்சாலை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்கவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

May be an image of textMay be an image of one or more people and text