புதினங்களின் சங்கமம்

யாழ் கொக்குவில் பகுதி அதிகாலையிலிருந்து சுற்றவளைப்பு!! ஒருவர் கைது!!

யாழ். கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 4 மணியிலிருந்து 9 மணிவரை பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளியில் செல்லவோ அல்லது வீட்டைவிட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வீடு வீடாக நுழைந்து வீட்டில் இருப்பவர்கள் தொடர்பில் பதிவுகள் இடம் பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்குட்படுத்தபட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.

இவ்வாறான சோதனை நடவடிக்கையின் போது வாள்வெட்டு குழுவைச்சேர்ந்த அசோக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து நெஞ்சாங் எனும் பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மீது முன்னரே வாள் வெட்டு தொடர்பான பல வழக்குகள் இருப்பதாகவும் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்து நாடு முழுவதும் முப்படைகளும் களம் இறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள்பலப்படுத்தப்பட்ட நிலையில் யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.