புதினங்களின் சங்கமம்

மணிவண்ணன் கைதும் விடுதலையும் – எவ்வாறு நிகழ்ந்தது!

யாழ். மாநகர சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதற்காக மாநகர முதல்வருக்கு இருக்கின்ற அதிகாரங்களுக்கு அமைய எற்படுத்தப்பட்ட நியமனங்கள்தான் விவகாரமாக மாறியிருக்கின்றது.
இது தென்னிலங்கையில் சலசலப்பை ஏற்படுத்தி – விவகாரமாவதற்கு, குறித்த செயற்பாட்டிற்கு நம்மவர்களினால் கொடுக்கப்பட்ட பில்டப் பிரதான வகிபாகம் பண்ணியிருப்பதாகவே தெரிகின்றது.
நியமனம் பெற்றவர்கள் முதல்வர் மணிவண்ணனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வான்புலிகளுடன் பிரபாகரன் எடுத்த படத்துடன் ஒப்பிட்டதும், மோட்டார் சைக்கிளில் போவதை படம் பிடித்து புலிகளின் காவல்துறையின் மோட்டார் சைக்கிள் ரோந்துடன் ஒப்பிட்டதும். வீதிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகின்ற வீடியோக் காட்சிகளை பதிவேற்றி சமூக ஊடகங்களில் பரவவிட்டு ஆரவாரம் பண்ணியதும் தென்னிலங்கை அரசாங்கமோ பேரினவாத சக்திகளோ இல்லை.
இந்தக் கைங்கரியங்களை எல்லாம் கனகச்சிதமாக செய்தது நம்முடைய ஆர்வக் கோளாறுகள்தான்!
கொடுக்கப்பட்ட பில்டப் இற்கு மணி அணியினரின் ஆசீர்வாதமும் இருந்திருக்கின்றது. கிடைத்த ஒரு வருடத்தினை பயன்படுத்தி சிறந்த நிர்வாகிகள் என்று தம்மை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் கொள்வது – மணி அகற்றப்பட முடியாதவன் என்பதை செய்திகள் ஊடாக, தூக்கி எறிந்தவர்களுக்கு கரியைப் பூசுவது போன்றவை குறித்த ஆசீர்வாதத்திற்கு காரணமாக இருக்கும்.
சிலுசிலுப்பு தேவையில்லை பலகாரம் தான் முக்கியம் என்று முதல்வர் மணி தரப்பு விசயத்தை நகர்த்தியிருக்கமாயின் இந்தளவிற்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்காது என்பதே பொதுவான சிந்தனை.
ஆக, எம்மவர்களின் பில்டப் தென்னிலங்கையின் கண்களை உறுத்த – சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்ற மரக்கட்டைகள் அவல் என நினைத்து உரலை இடிக்க, விவகாரம் பொலிஸ் விசாரணை, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலையீடு, மணிவண்ணன் கைது என்று சென்று, இப்போது முதல்வர் மணிவண்ணன் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லபட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியதும், 24 மணித்தியாலங்களுக்குள் காட்சிகள் மாறும், பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்று யாரும் நினைக்கவில்லை.
அவ்வாறு நினைத்திருந்தால் மணியை சைக்கிளில் இருந்து கழட்டி வீசியவர்கள் வாயே திறந்திருக்க மாடடார்கள். ‘குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த மணிக்கு மணி அடிக்கப்பட்டு விட்டது, அதை வைத்து கொஞ்ச நாளைக்கு அரசியல் பண்ண முடியும்’ என்ற எதிர்பார்ப்பே முன்னணியின் கண்டனங்களுக்கு பின்னணி!
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், கைது செய்யப்பட்ட அன்றிரவே, வவுனியாவில் இருந்து முதல்வர் மணி அழைத்து வரப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டார்.
இப்போதைய பேசுபொருள், முதல்வர் மணிவண்ணன் விடுதலை செய்யப்பட்டமைக்கு காரணம் யார்?
திருவாளர் சுமந்திரனின் வாத்திறன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நகர்வு, அமெரிக்க துாதரகம் போன்ற வெளிச்சக்திகளின் அழுத்தம் என்றெல்லாம் ஒவ்வொரு தளங்களிலும் விவாதம் தொடர்ந்து கொண்டிருப்பததை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மேற்சொன்ன ஒவ்வொரு தரப்பினரதும் ஆதரவாளர்கள், தமது தரப்பினரே முதல்வர் மணியின் விடுதலைக்கு காரணமானவர்கள் என்று கூறிவருகின்றனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி திருவாளர் சுமந்திரன் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற தவிர்க்க முடியாக சட்ட ஆளுமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தென்னிலங்கை நீதிமன்றங்களிலும் அவருக்கு சிறப்பான இடம் இருக்கின்றது. அவ்வாறான ஒருவர், நீதிமன்றில் ஆஜராகி பிணை விண்ணப்பத்திற்கான நியாயங்களை முன்வைக்கின்ற போது, உளரீதியான தைரியம் நீதவானுக்கு ஏற்படும் என்பது மறுப்பதற்கு இல்லை.
ஆனால் முதல்வர் மணியின் விவகாரத்தில், பிணை விண்ணப்பம் கோருகின்ற சந்தேகநபர், தலைமறைவாக மாட்டார் – வழக்கு தொடுநர் தரப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தமாட்டார் – ஆதாரங்களுக்கு சேதத்தினை ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை கெரளவ நீதவானுக்கு இருக்குமாயின் அவர் பிணையை வழங்க முடியும்.
எனவே, முதல்வர் மணி, நீதவானுக்கு நன்கு பரீச்சயமானவர் – சட்டத்தரணி – மாநகர முதல்வர். இந்நிலையில் பிணை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் கனீஸ்ட சட்டத்தரணிகளுள் கனிஸ்ட சட்டத்தரணியாக இருக்கின்ற ஒருவர் பிணை விண்ணப்பம் செய்திருந்தாலே பிணை கிடைத்திருக்கும் என்பதுதான் யாதார்த்தம்.
அடுத்ததாக தற்போதைய அரசாங்கத்தினை தெரிந்தவர்கள் அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார் என்ற கருத்தினையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தற்போதைய அரசாங்கம் அவ்வாறான அழுத்தங்களுக்கு படிந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் தன்மையுடையதாக இருக்குமாயின் அமெரிக்காவுடன் எம்.சி.சி. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவிற்கும் வழங்கப்பட்டிருக்கும். ஜெனீவா பரபரப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், எம்.சி.சி க்கும் கிழக்கு முனையத்திற்கும் வழங்காத அழுத்தத்தினையா மணிக்காக சர்வதேசம் ஏற்படுத்தப் போகின்றது?! அதுவும் ஒருசில மணித்தியாலங்களில்….?!
முதல்வர் மணி வவுனியாவில் இருந்து அழைத்து வரப்படுகின்றார் – நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படப் போகின்றார் என்ற செய்தி பரவிய சமநேரத்திலேயே, யாழ் மாநகர முதல்வரின் விடுதலை தொடர்பான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சொன்னபடியே சம்பவங்களும் நடந்து முடிந்திருக்கின்றன.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது, சமூக ஊடகங்களினால் ஏற்படுத்தப்பட்ட பில்டப் தென்னிலங்கையில் ஏற்பட்டுத்திய சலசலப்புக்கள்தான் யாழ். முதல்வரின் கைதிற்கு காரணமாக இருந்திருக்கின்றது. எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் எனக் கருதலாம்.
எனினும், விடயத்தை ஆழமாக ஆராய்ந்தபோது ஜனாதிபதிக்கு ஏற்பட்ட புரிதலும், “அரசாங்கத்திற்கு வில்லங்கத்தினை ஏற்படுத்தக்ககூடிய விடயங்களில் டக்கி தலை போடாது” என்ற ராஜபக்ஷக்களின் ஆழமான நம்பிக்கையும் மணியின் விடுதலையை சாத்தியமாக்கி இருக்கின்றது.