கிளிநொச்சியில் காவாலியின் கொடூரத் தாக்குதல்!! 7 வயதுச் சிறுவன் பலி!! 4 வயதுச் சிறுவன் படுகாயம்!!
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் ஒருவர் 17 வயது உடைய இளைஞர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவருடைய சகோதரனான 04 வயதுடைய சிறுவன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் தாய், தந்தை மற்றும் மூன்று பிள்ளைகளுடன் குடும்பம் ஒன்று வசித்துவந்துள்ளது. குறித்த குடும்பத்தினரில் தாயார் சில நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கின்றார்.
இந்நிலையில் தந்தையார் தன்னுடைய சகோதரனின் வீட்டிற்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று அங்கு பிள்ளைகளை விட்டுவிட்டு அவரும் வெளியேறியிருப்பதாக தெரியவருகிறது.
இதனிடையே அந்த வீட்டில் இருந்த மாடு ஒன்றும் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சிறார்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து மூத்த மற்றும் இளைய பிள்ளை ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் 4 வயதுடைய இளைய மகன் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது.
இதேவேளை,
சிறார்கள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்த 17 வயதுடைய இளைஞன், சிறார்களில் இரண்டாவது பிள்ளையாகிய 07 வயதுச் சிறுவனாகிய அப்துல் ரஹ்மான் தயா என்ற சிறுவனை சிறுவர்களின் சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.
பின்னர் இளைஞர் மட்டும் திரும்பி வந்த நிலையில் சிறுவனைத் தேடிச் சென்றபோது, சிறுவன் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
அவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவருடைய மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி பிறேம்குமார், சிறுவனின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாகவும், இரத்தம் உறைந்தே சிறுவன் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்ட இளைஞரை காணவில்லை என்று கிளிநொச்சி பொலிஸார் தேடிவருவதாக தெரியவருகிறது.

