புதினங்களின் சங்கமம்

யாழ் சாவகச்சேரியில் காப்பற் றோட்டை வெட்டியது ஏன்?? சைக்கிள் கட்சி மகாதேவன் விளக்கம்!!

ஊடகங்களும், செய்தியும்….
நேற்றையதினம் நானும், இன்னொரு உறுப்பினரும் சம்பந்தமாக செய்திகள் இணையத்தளங்களிலும், சில பத்திரிகைகளிலும் வந்திருந்தன. அதாவது கோடிக்கணக்கில் போடப்பட்ட காப்பெற் வீதி வெட்டப்பட்டதாகவும், எனது வீட்டிற்கு முன்னால் உள்ள தப்பு தண்ணீரை வெட்டி வெளியேற்ற வீதியை வெட்டி விட்டதாகவும் செய்தியிட்டதுடன், அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்ததாகவும், அடாத்தாக வெட்டியதாகவும் செய்தியிட்டுள்ளனர். இதற்கு பின்னால் இயங்குபவர்களை பற்றி நன்கு அறிவோம். அது ஒருபுறம் இருக்கட்டும்.
எமது பகுதிக்கான வெள்ளநீர் என்னுடைய வீட்டினுடையது மட்டும் அல்ல. சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதி தொடக்கம் பழைய பொலிஸ் நிலைய வீதி வரையான வெள்ளம் ஒரு பக்கத்தாலையும், மறுபுறம் கண்டுவில் டச்சு வீதியிலிருந்து நகர சபை எல்லைக்குட்பட்ட பல இடங்களை உள்ளடக்கிய பரப்பிற்கான வெள்ளநீர் எமது பகுதிக்கு வந்தே கற்குழி வீதியில் உள்ள ஒரேயொரு வெள்ள வாய்க்கால் ஊடாகவே கற்குழி வயலை சேர்ந்து கல்வயல் பெருங்குளம் வழியாக இல்வாரை குளம் சென்று கனகம்புளியடி ஊடாக சரசாலை செல்வதுதான் வழமை. ஆனால் இந்த வெள்ளம் வழிந்தோடும் பாதைகள் பல இடங்களில் வீதி புனரமைப்பின்போதும், கட்டட அமைப்பின்போதும் உரிய வகையில் கவனிக்கப்படாமல் வேலைகள் நடைபெற்றுள்ளன. இதனை பலரும், பலமுறை கூறியும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே இம்முறை தொடர்ந்து வந்த இரு புயலினால் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு நீர் மழை நீராக தேங்கியதால் எல்லா இடத்து கழிவுகள், மலக்கழிவுகள், கால்நடைகளின் கழிவுகள் என எமது பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், நுளம்பு, தவளை பெருக்கங்களும் அதிகரித்துள்ளன. இதனை யாரும் கண்டுக்கவில்லை. இவ்வாறு எமது பகுதி மட்டுமல்ல யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இதே நிலமை.
அவ்வாறிருக்கு நேற்று முன்தினம் வெள்ளத்தை வெட்டிவிட முயற்சிகள் எடுத்தும் வழிந்தோட பாதையில்லாதபடியால் வீதி வெட்டி நீர்க்குழாய் வைப்பதற்கான முயற்சி செய்தோம். இதனை உரியவர்களுக்கு அறிவித்த பிற்பாடே நான் செய்தேன். அதற்கான சகல செலவும் என்னுடையது என்றும் கூறினேன். இதனை செய்ய வேண்டியவர்கள் அன்றைய காலத்தில் நகர சபையில் வீதிகளை போட்டவர்களும், அதற்கான அனுமதிகளை வழங்கியவர்களும், அதனை மேற்பார்வை செய்தவர்களுமே. இதை இன்று நாம் செய்ய முற்பட்டபோது பொதுச்சொத்தை சேதமாக்கியதாக எமக்கு எதிராகத் திருப்பிவிட்டதுடன், எனது வீட்டில் நின்ற தப்புப்தண்ணீரை வெட்டிவிடுவதற்காகவே வெட்டியதாக செய்தியிட்டுள்ளது மிகவும் மனவருத்தத்திற்குரியது.
எமது பகுதியில் இருப்பவர்களுக்கு தெரியும் எமது பகுதியில் மழை பொய்தால் என்னநிலை என்பது. அத்துடன் கீழே இணைத்துள்ள படத்தில் சிவப்பு நிறத்தில் அண்ணளவாக குறித்துள்ள இடங்களிலிருந்தே வெள்ளம் வருகின்றது. நான் குறித்த இடங்களைவிடவும் அதிகமான இடமும் இடங்கும். அத்துடன் மஞ்சள் நிறத்தால் காட்டப்பட்டது வெள்ளவாய்க்கால். நீல நிறத்தால் காட்டியது நாங்கள் வைத்த வெள்ளநீர் குழாய். இது தவறாயின் அதற்கான முழுப்பொறுப்பும் என்னையே சாரும்…நன்றி ஆதரவாக கருத்திட்ட அனைவருக்கும்… இந்த செய்தியின் பின்னணியில் அரசியலுக்காக செய்பவர்களாயின் மற்றவர்களின் மனநிலையையும் கொஞ்சம் சிந்தியுங்கள்… உங்கள் தொடர்பான எல்லா தவறான செய்திகளையும் அறிந்திருந்தும் உங்களை பற்றி எந்தவித செய்திகளையும் வெளியிடாத எமது மனநிலைகளையும் அறியப்பாருங்கள். அரசியல் என்பது என்ன என்பதை அறிய பழகுங்கள்… உங்களுக்கும் நன்றி எங்களையும் பெரியவர்களாக நினைப்பதற்கு…