புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு தற்கொலைத் தாக்குதல் இலக்கு புனிதமரியாள் தேவாலயம்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரி, முதலில் புனித மரியாள் தேவாலயத்தையே இலக்கு வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

மட்டக்களப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கான இலக்கு இறுதி நேரத்தில் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு புனித மைக்கேல் ஆண்கள் பாடசாலைக்கு எதிரில் அமைந்துள்ள புனித மரியாள் தேவாலயத்திற்கே தற்கொலைக் குண்டுதாரி முதலில் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், அந்த தேவாலயத்தின் ஆராதனைகள் முடிவடைந்து விட்டதை, தற்கொலைக் குண்டுதாரி அங்கிருந்தோரிடம் விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு பேராயர் ஜோசெஃப் பொன்னையா தெரிவித்துள்ளதாக, ஆங்கில செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகவே தான் தற்கொலைக் குண்டுதாரி தனது இலக்கை மாற்றியுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த ஞாயிறு அன்று புனித மரியாள் தேவாலயத்தில் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆராதனைகள் காலை 7 மணிக்கே ஆரம்பித்தமை காரணமாக, காலை 8.30 அளவில் அனைத்து வழிபாடுகளும் நிறைவடைந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த தற்கொலைக் குண்டுதாரி அதற்கு முதல் நாளன்றும் புனித மரியாள் தேவாலயப் பகுதியில் நடமாடியதாகவும் கூறப்படுகின்றது.

அன்றைய தினத்தில் புனித மரியாள் தேவாலயத்தில் சுமார் 1000 பேர் வழிபாட்டிற்காக குழுமியிருந்ததாகவும், ஆராதனைகள் 8.30 அளவில் முடிவுற்றமை காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் அங்கிருந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, தற்கொலைக் குண்டுதாரி தனது இலக்கை மாற்றிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.