அமெரிக்காவில், மூளையை உண்ணும் அமீபாவால் 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!
கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்கா ஏற்கெனவே கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது. உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் அமெரிக்கர்களுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தற்போது அமீபா உருவெடுத்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் 6 வயது சிறுவன் மூளையை உண்ணும் அமீபா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். பொதுவாக வெதுவெதுப்பான, தூய நீரில்தான் இந்த அமீபா காணப்படும்.
இது உடலுக்கு நுழைந்தால், ஒற்றை தலைவலி, ஹைபர்தர்மியா, கழுத்து வலி, வாந்தி, தலைச்சுற்றல், சோர்வு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். உயிரிழந்த சிறுவனின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள குழாயில் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் நகரத்தின் பிற பகுதிகளிலும் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொதிக்க வைத்த நீரை மட்டும் குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. இந்நிலையில் அப்பகுதிக்கு பேரிடர் அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் 1983- 2010ம் ஆண்டு வரை அமீபா பாதிப்பால் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

