Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழில் விவாகரத்தான பொம்பளை குழந்தை பெற்றது எப்படி?? யாழிலும் சொல்வதெல்லாம் உண்மை நடாத்தலாம்!!

போன கிழமை பாடசாலையிலிருந்து மகனை ஏற்றுவதற்காக விரைந்து கொண்டிருந்தேன்…. எனக்கு முன்னால் சென்ற ஒரு பிளசர் மோட்டார் சைக்கிளை விலத்திச் செல்லும் போது அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளின் முகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்…. ஏனெனில் அவர்கள் இருவரும் செய்த வேலை அப்படி… என்னைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் சிரித்தார்கள். நானும் மோட்டார் சைக்கிளை சிலோவாக செலுத்தி அவர்களை அருகே வரச்செய்தேன்…. மாநகரசபை சுகாதாரப்பணிமனை வீதி மர நிழலில் அவர்களை நிறுத்தி சந்தித்தேன்….. ”எப்ப உது நடந்தது” என்டு கேட்ட போது ”போன வருசம்தான்” என்று கணவர் பதில் சொன்னார்….. கையில் 5 மாதமளவான கைக் குழந்தையை மனைவி வைத்திருந்தாள்…. அதையும் பார்த்தேன்… உடனே கணவனுக்கு விளங்கி விட்டது… ”போன பங்குனியில சேர்ந்திட்டம்” என்றார்…..நான் பெரும் ஆச்சரியத்தில் அப்படியே நின்றுவிட்டு பாடசாலையில் மகனை ஏற்றிவர நேரம் சென்றதால் ”சரி நான் போட்டு வாறான்.. மகனை ஏற்ற விட்டது” என்று சொல்லிவிட்டு விரைந்தேன்…

நேற்றுவரையும் என்னை பெரும் வியப்புக்குள்ளாக்கிய சம்பவம்தான் நான் சொல்லும் இந்தச் சம்பவம். காரணம் என்னவென்றால் இவர்கள் இருவரும் பெரும் அடிபிடிப்பட்டு 2013ம் ஆண்டில் பிரிந்து விவாகரத்துப் பெற்ற ஜோடிகள். அந்த நேரத்தி்ல் எனக்கு இருந்த ஊடகச்செயற்பாடுகளின் தொடர்புகளால் இவர்களது அடிபிடி, விவாகரத்துத் தொடர்பாக நான் விரிவாக அறிந்து வைத்திருந்தேன். 2011ம் ஆண்டளவில் அந்த பெண்ணுக்கு 21 வயது. பெடியனுக்கு 23 வயது. இவர்கள் காதலித்து வீட்டை விட்டு ஓடியவர்கள். இவர்கள் எவ்வாறு காதலித்தார்கள் என்பது தொடர்பாக விபரமாக நான் அறியவில்லை.. ஆனால் எவ்வாறு அடிபிடிப்பட்டார்கள் என்பதை விபரமாகச் சொல்லலாம். அவ்வளவும் எனக்கு நினைவில் உள்ளது.

இவற்றை நான் விளக்கமாக கூறி இதை அந்த தம்பதிகள் வாசித்தால் ( தற்போதும் எனது முகப்புத்தகத்தில் கணவன், மனைவியின் அண்ணன் ஆகியோர் நண்பர்களா உள்ளனர்) மீண்டும் அதே ஆக்ரோசத்துடன் அடிபிடிப்படத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் கணவன் தனது மனைவியின் தாய், தகப்பனை தாக்கி காயப்படுத்திய குற்றத்திற்காக 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை அந்த நேரத்தில் கிடைத்திருந்தது. ( மாமிக்குக்கும் மாமாவுக்கும் அடிக்கும் அளவுக்கு அவனை ஆத்திரப்படுத்த வைத்தது மனைவியும் வெளிநாட்டில் இருந்த அண்ணனும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்)

ஒருவரை ஒருவர் மாறி மாறி அடிபிடிப்பட்டதோடு நில்லாது கணவனும் மனைவியும் மாறி மாறி இருவரின் குடும்பத்தவர்களையும் தாக்கியும் இருந்தனர். ஆனால் கணவனின் தாய் தனது மருமகள் தனக்கு அடித்தது தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யவில்லை. மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டாள் என்றும் தான் விவாகரத்து கொடுக்க மாட்டேன்… அதே நேரம் இவளோட வாழவும் மாட்டேன் என்று அரபு நாடு ஒன்றுக்கு கணவன் செல்ல முற்பட்ட போது மனைவியின் சட்டத்தரணி பாஸ்போட்டை தடுத்து நிறுத்தி அந்த செயற்பாட்டுக்கு ஆப்பு வைத்தார். அதன் பின்னர் 2013ம் ஆண்டளவில் விவாகரத்து பெற்றது எனக்கு தெரியும். பின்னர் நல்லுார் திருவிழாக்களின் போது குறித்த பெண்ணையும் அவளது தாயையும் பலதடவை நான் நேரில் சந்தித்து சிரித்துவிட்டு அகன்றுள்ளேன். ஆனால் கணவனை அதன் பின்னர் காணவில்லை……

இவர்களை வியாழன் சந்தித்த போது இவர்களின் தொலைபேசி இலக்கத்தை வாங்காமல் விட்டுவிட்டேன் என ஏங்கியபடி 2012ம் ஆண்டில் இவர்கள் இருவரும் தங்களுக்குள் சண்டை பிடித்துக் கொண்டு என்னுடன் சற்றிங் தொடர்பில் இருந்த ஞாபகத்தில் பழைய சற்றிங்குகளை கிண்டினேன்…. அதில் கணவனின் தொலைபேசி இலக்கம் இருந்ததால் மகிழ்ச்சியடைந்து நேற்று அந்த நம்பருக்கு போன் எடுத்தேன். அந்த நம்பரில் கணவனின் தாயே கதைத்தார். அவரிடம் கணவனின் தொலைபேசி இலக்கத்தை வாங்கி அவருடன் தொடர்பு கொண்டு “உங்கள் இருவரையும் சந்திக்க வேணும். வரலாமா“? என கேட்ட போது “தாராளமாக வாங்கோ“ என சொல்லி பெண்ணின் தாய் வீட்டிலேயே இருப்பதாகவும் கூறினார்.

இவர்கள் எவ்வாறு மீண்டும் இணைந்தார்கள் என்ற ஒரே ஒரு கேள்விக்கான ஆர்வத்தில்தான் அங்கு சென்றேன். இருவரும் சந்தோசமாக சிரித்தபடி வரவேற்றார்கள். நான் நேரிலேயே கேள்வியைக் கேட்டேன்….. ”நான் எதுக்கு வந்தது என்றால்… நீங்க எப்படி திரும்ப சேர்ந்தீர்கள் என்று அறியத்தான்” என்றேன்……

உடனே ”அம்மா மோசம் போன நேரத்தில உந்த லுாசு வீட்ட வந்திச்சு…. அதோட போகாமல் நின்டுட்டுது… நானும் பாவமா இருக்குது என்டு போட்டு கலைக்காமல் விட்டுட்டன்’ என்று தடாலடியாக சிரித்தபடி பதிலைச் சொன்னாள் மனைவி……

அப்புடி இல்லை அண்ணா… மாமி மோசம் போனவுடன உவள்ட அண்ணன் வெளிநாட்டில இருந்து வந்தவன்… மனிசி வரேல…. எனக்கு விவாகரத்து முடிஞ்ச பிறகுதான் அவருக்கு கலியாணம் நடந்தது. பொம்பிளை வெளிநாடு போய் கொஞ்சநாளிலேயே உவளட அண்ணா அவளுக்கு அடிச்சிருக்கிறார். அவள் பொலிசிட்ட சொல்லி அவரை பிடிச்சுக் கொண்டு போட்டாங்கள். இப்ப பிரிஞ்சு இருக்கினம். அதாலதான் அவா வரேல…. நான் செத்தவீட்டில வந்து நிக்கேக்க அவர் என்னைப் பார்த்த பார்வையில தெரிஞ்சிச்சு என்னட்ட மன்னிப்பு கேக்கிறார் என்டு….. அதாலதான் நான் செத்தவீட்டில தங்கி நிண்டனான்…. நான் அன்று இரவே போக வெளிக்கிட ஆயத்தமா இருக்க உவள்தான் உள்ளுக்கு வந்து இருங்கோ என்டு கூப்பிட்டவள்” என்று கணவன் தனகத் தொடங்கினார்…..

அவர்களின் சண்டையை சற்று நேரம் தொடரவிட்டு அவதானித்தேன்….. இவர்கள் இனியும் பிரியமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்திச்சு… அத்துடன் நீதிமன்றம் திரும்பப் போனால் நீதிபதி இருவரையும் சேர்த்து சிறையில் அடைப்பார் அல்லது இருவருக்கும் நடுத்தெருவில் வைத்து பிரம்படி கொடுக்க உத்தரவிடுவார் என்றும் விளங்கிச்சுது….. அவர்களுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கதைத்து அவர்களின் ஆண் குழந்தையின் விளையாட்டையும் பார்த்துவிட்டு அந்த நேரத்தில் இருந்த வீறாப்புகள் இன்றி சோர்ந்து போயிருந்த மனைவியின் தந்தையுடனும் கதைத்துவிட்டு வெளியேறினேன்….

வெளியேறுவதற்கு முதல் ”உங்களுடன் சேர்ந்து செல்பி ஒன்று எடுக்கவா என்று கேட்ட போது ”ஐயோ வேண்டாம் அண்ணா… நீங்கள் மீடியாவில போட்டுடுவிங்கள்” என்று மனைவி கெஞ்சினாள்… நான் சிரித்துவிட்டு வெளியேறினேன்.

வீட்டில் வந்து மனைவியின் வெளிநாட்டு அண்ணனின் பேஸ்புக்கை கிண்டினேன்….. 1984ம் ஆண்டு பிறந்த அவன் தனது நிலையை single என்று போட்டிருந்தான்.

மீண்டும் நான் கணவனுக்கு கோல் பண்ணினேன்….. ”உங்கட மச்சானிட வைFவ் இற்கு அண்ணா இருக்கிறாரா என்டு கேட்டேன். ”ஓம்” என பதில் வந்தது. ’அவாக்கு தாய் இருக்கிறாவா” என்று கேட்டேன் ”ஓம்” என பதில் வந்தது. உங்கட மனிசியை கவலைப்பட வேண்டாம் என்டு சொல்லுங்கோ…. அண்ணிட அண்ணனுக்கு கலியாணம் முடிஞ்சு கொஞ்ச நாளில அண்ணிட அம்மா செத்துப் போடுவா. அதுக்குப் பிறகு அண்ணணும் அண்ணியும் சேர்ந்துவிடுவினம்” என்று சொன்ன போது பெரிதாகத் சிரித்தான் கணவன்……..

இவர்களைச் சந்தித்த பின்னர் பல முடிவுகள் எடுக்க கூடியதாக இருந்தது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் தம்பதிகளின் ஏராளமான விவாகரத்து விடயங்கள், அடிபிடிகள் என்பனவற்றை அக்கு வேறு ஆணிவேறாக அறிந்துள்ளேன். இவர்கள் இருவருக்கும் விவாகரத்து பெற்றுக் கொடுத்த சட்டத்தரணியே தற்போது விவாகரத்துப் பெற்றுள்ளார். தம்பதிகளுக்கிடையேயான விவாகரத்துகளுக்கான காரணங்களின் ஆணி வேர் எனக் குறிப்பிடும் காரணம் ( அது என்ன என்று கேக்காதையுங்கோ) அல்லாத காரணங்களால் உருவாகும் விவாகரத்துக்களில் பெருமளவான விவாகரத்துகளுக்கு தம்பதிகளின் உறவுகளே காரணம். இது தொடர்பாக விளக்கமாக நேரம் வரும் போது தருகின்றேன்.

நன்றி
பேஸ்புக் பதிவு