புதினங்களின் சங்கமம்

யாழில் இந்து சமயப் போராட்டத்தின் பின் வீடு திரும்பிய நபரிற்கு நேர்ந்த விபரீதம்!!

யாழ்ப்பாணம், மருதனார் மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், வீடு திரும்பிய பின்னர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் யாழ்.சுன்னாகத்தைச் சேர்ந்த நாகேந்திரம் சுபா தர்சன் (வயது-40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அண்மைக்காலமாக இந்து சமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) யாழ்ப்பாணம், மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய ஒருவர், தனது வீட்டில் நீராடிவிட்டு பின்னர் தேநீர் அருந்தி கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர், அகில இலங்கை இந்து மகாசபாவின் சுன்னாகம் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து கடந்த சனிக்கிழமை(06) காலை யாழ். மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி போராட்டம் ஆலய வழிபாடுகளுடன் காலை-09 மணியளவில் ஆரம்பமாகி இருந்தது.

மருதனார்மடம் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் ஆலய பிரதம குரு இ. சுந்தரேஸ்வரக் குருக்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மருதனார்மடம் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் ஆலய அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியரும், வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகருமான என்.பி.ஸ்ரீந்திரன் தலைமையில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்ட ஆரம்ப நிகழ்வில் இந்துத் துறவிகள் வரிசையில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் நிலையத் தலைவர் சுவாமி சிதாகாசானாந்த சுவாமிகள், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் செயலாளர் சிவஸ்ரீ ஈசான சக்தி கிரீவன், யாழ்ப்பாணம் ஸ்ரீசாயி குருசேஸ்திர முதல்வர் வணக்கத்திற்குரிய சாயி மாதா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்துக் குருமார் மற்றும் இந்து அமைப்புக்களின் நிர்வாகிகளினது உரைகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்து மக்கள், இந்து அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.