கொரோனாவுக்கு சிறந்த மருத்தென கூறி டில்லியில் மாட்டு சிறுநீா் குடித்து விருந்து
மாட்டின் சிறுநீா் கொரோனோ வைரஸை தடுக்கக் கூடியது எனக் கூறி இந்தியாவில் உள்ள இந்து அமைப்பைச் சோ்ந்த 200 போ் இன்று ஒன்றுகூடி மாட்டு சிறுநீா் குடித்து விருந்து நடத்தினா்.
இந்துக்கள் பசுவை புனிதமானதாக கருதுகின்றனா். சிலர் மாட்டு சிறுநீரில் மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் அதனைக் குடிப்பதால் நோய்த் தொற்று ஏற்படாது எனவும் நம்புகின்றனா்.
இவ்வாறாக நம்பிக்கையுடன் இந்து அமைப்பொன்றைச் சோ்ந்தவா்கள் இன்று சனிக்கிழமை ஒன்றுகூடி சிறுநீர் குடிக்கும் விருந்தை நடத்தினா்.
மாட்டின் சிறுநீர் புற்றுநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்தாது. இதனால் கொரோனா வைரஸைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நிபுணர்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் இவ்வறான செயற்பாடுகளில் பலா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தியாவின் தலைநகரில் அகில் பாரத் இந்து மகாசபா என்ற குழுவைச் சோ்ந்த 200 போ் மாட்டின் சிறுநீரைக் குடித்ததுடன், இந்தியாவில் வேறு இடங்களிலும் இதே போன்ற நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக அறிவித்தனா்.
நாங்கள் 21 ஆண்டுகளாக மாட்டு சிறுநீர் குடித்து வருகிறோம். நாங்கள் மாட்டு சாணத்திலும் குளிக்கிறோம். ஆங்கில மருந்தை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை நாங்கள் ஒருபோதும் உணரவில்லை என மாட்டு சிறுநீா் விருந்தில் கலந்து கொண்ட ஓம் பிரகாஷ் என்பவா் கூறினார்.
உலகளவில் 138,000 க்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 5,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனா். இன்றுவரை இந்த வைரஸூக்கான மருத்து கண்டறியப்படவில்லை. இதனால் இந்த வைரஸை எதிர்கொள்ள முடியாது உலகம் திணறி வருகின்ற நிலையில் இவ்வாறான சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

