புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர் தப்பியோட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இன்று (13) அதிகாலை வேளையில் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு, செம்மலை பகுதியில் ஐஸ் போதைப் பொருளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை விஷேட அதிரடி படையினர் நேற்று (12) மாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்த நபரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்த நிலையில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 2.50 மணி அளவில் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில், நேற்று மாலை முல்லைத்தீவு விஷேட அதிரடி படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் செம்மலை பகுதியிலுள்ள வீடொன்றில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்ததாக ஒருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

சோதனையின் போது சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 910 கிராம் ஐஸ் போதைப் பொருளையும் செம்மலை பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவரையும் விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர் மற்றும் போதைப் பொருளினையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-