புதினங்களின் சங்கமம்

யாழில் புலம்பெயர் தமிழரிடம் பெருமளவு நகைகள், பணம் கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்!!

வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகல் வேளையில் உடைக்கப்பட்டு 20 பவுண் தங்க நகைகளும் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் யாழ்.கரவெட்டி சாமியன் அரசடிப் பகுதியில் இன்று புதன்கிழமை(19) நடந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த சிலர் குறித்த பகுதியிலுள்ள தமது உறவினரின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் வீட்டிலுள்ள அனைவரும் இன்று முற்பகல் ஆலயத்துக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டுக்குள்ளிருந்த பொருட்கள் ஆங்காங்கே வீசப்பட்டிருப்பதும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.