வித்தியா கொலைக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பும் சந்தர்ப்பம் வருமா?? 2020 மேல் மீண்டும் விசாரணை!!
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) விசாரணைகளை மேற்கொண்டது.
விசாரணைகளின் நிறைவில் 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் 28ஆம் திகதி 9 எதிரிகளில் 7 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், கூட்டு வன்புணர்வு மற்றும் சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றங்களுக்கு 7 குற்றவாளிகளுக்கும் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. 2 பேர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் 7 பேரை குற்றவாளிகளாக தீர்ப்பாயத்தின் 3 நீதிபதிகளுமே ஏகமனதாகத் தீர்மானத்திருந்தனர்.
இந்த நிலையில் 5 நீதியரசர்களுக்கு குறையாத அமர்வின் முன்னிலையிலேயே தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்ற சட்ட ஏற்பாட்டுக்கு அமைவாக உயர் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு மனு முன்வைக்கப்பட்டது.
சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார், அவரது சகோதரர் மகாலிங்கம் சசிதரன், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்றில் 2017ஆம் ஆண்டு இறுதியில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேன்முறையீடு இன்று உயர் நீதிமன்றில் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
எனினும் 5 நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மேன்முறையீடு விசாரிக்கப்படவேண்டும் என்று அறிவித்த இன்றய அமர்வு, மனுவை 2020 மே 19ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

