புதினங்களின் சங்கமம்

புலம்பெயர்ந்த தமிழர்களே!! உங்களுக்கு கோத்தபாய இப்படி சொல்கின்றார்!!

வெறுமனே என்னை விமர்சிப்பதைவிட, கடந்த கால விடயங்களை மறக்குமாறு தமிழ் புலம்பெயர்ந்தோரைக்கூட நான் கோர விரும்புகிறேன். இதனால் யாருக்கும் பயனில்லை – மாறாக, நம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய ஆங்கில ஊடகமான Strategics Newsஇன் ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த செவ்வியின் ஒரு பகுதி வருமாறு:

கேள்வி – இந்தியப் பிரதமருடன் பேச நிறைய விடயங்கள் இருக்கும். ஆனால் நீங்கள் அங்கு வரும் அவருடன் சிறந்த உரையாடலில் ஈடுபடுவீர்கள் என்று நினைக்கின்றேன். நான் இறுதியாக இரண்டு கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். ஒன்று தேர்தல்களில் நடந்த வாக்களிப்பு முறை. தமிழர்களும் முஸ்லிம்களும் உங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பியிருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் முழு நாட்டின் ஜனாதிபதியும்கூட. சிறுபான்மையினருடனான நல்லிணக்க செயல்முறையை நீங்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறீர்கள்?

அபிவிருத்திதான் எனது பதில் என்று நம்புகின்றேன். கடந்த பல ஆண்டுகளாக, தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்கள தலைவர்களும் மக்களை முட்டாளாக்க மட்டுமே நடைமுறை சாத்தியமற்றவற்றைப் பேசிக் கொண்டிருந்தனர்.

நாம் முதலில் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் இலங்கையர்களாக வாழவும், கல்வியைப் பெறவும், சிறந்த வாழ்க்கையை வாழவும், நல்ல வேலையைப் பெறவும், கண்ணியமாக வாழவும் அனைவருக்கும் நல்ல வாய்ப்பை வழங்கவேண்டும். அதனால் நான் அந்த சூழலை உருவாக்குவேன்.
மற்ற அரசியல் விடயங்கள் தொடரட்டும் – அவற்றை விவாதிக்க முடியும். ஆனால் அதில் மட்டும் கவனம் செலுத்த முடியாது. மக்களின் நல்வாழ்வை புறக்கணிக்கவும் முடியாது.

முக்கியமானது என்னவென்றால், நாட்டை அபிவிருத்தி செய்வது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்கட்டமைப்புக்களை மேம்பாடு செய்வது. எங்களால் முடிந்ததை நாங்கள் செய்தோம், அதைத் தொடர்வோம்.

தனியார் தொழில்துறைகளை சிறுபான்மை மக்களின் பகுதிகளுக்கு நகர்த்த வேண்டும். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், கல்வியை மேம்படுத்தவும் – பொதுக் கல்வியை மட்டும் குறிக்காது, தொழிற்கல்வியை வளர்த்துக் கொள்ளவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

நீண்ட காலமாக, பாடசாலைக்கு செல்ல வாய்ப்பு இல்லாத குழந்தைகளே காடுகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு சில பயிற்சிகள் வழங்கப்பட்டால் அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்த முடியும் – அவர்கள் வேலைகளில் ஈடுபடுவார்கள்.

இதுவே எனது கவனம். இதனால் சிறுபான்மை மக்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும்.

இறுதியாக உங்களிடம் ஒன்று கேட்கின்றேன். உங்களைப் பற்றி மேற்கத்திய கருத்து உள்ளது. குறிப்பாக நீங்கள் சர்வாதிகார அல்லது இனவெறி சிங்கள தலைவர். நீங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்களுக்கு நிறைய பயம் இருக்கிறது. அதனால் முஸ்லிம்களுக்கு நீங்கள் எவ்வாறு உறுதியளிப்பீர்கள்?

மோதல் காலத்தில் உருவாக்கப்பட்ட தவறான கருத்து இது என்று நான் நினைக்கிறேன். நான் 20 ஆண்டுகள் இராணுவத்தில் இருந்தேன் என்பது உண்மை. பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவ அதிகாரியாக நான் போராடிக் கொண்டிருந்தேன். பின்னர் நான் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு வெளிநாடு பயணமாகி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தேன்.

பின்னர் நான் மீண்டும் நாடு திரும்பி பாதுகாப்புச் செயலாளராக இருந்தேன். ஆனால் நாட்டு மக்கள் என்னை பாதுகாப்பு செயலாளர் என்று மட்டுமே அங்கீகரித்தனர். அவர்கள் என்னை பாதுகாப்புச் செயலாளர் என்றுதான் அறிவார்கள். அதனால் இந்த மனிதர் சர்வாதிகாரியாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

நான் உண்மையில் ஒழுக்கமான நபர், நான் இனவெறியற்றவன் என்பதை எனது செயல்களால் நிரூபித்துள்ளேன். நான் சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு மட்டும் வேலை செய்யவில்லை. அதனால்தான் நாட்டை வளர்ப்பதில் என்னுடன் இணையுமாறு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்தேன். உங்களுக்கு தெரியும், எதிர்க்கட்சி என்னை ஒரு சர்வாதிகாரி அல்லது எதேச்சாதிகரம் கொண்டவர் அல்லது எதுவாக இருந்தாலும் காட்ட முடியும். ஆனால் நான் அப்படிப்பட்டவன் இல்லை.

எனது செயல்களில் மக்கள் பார்ப்பார்கள். என்னுடன் சேருமாறு சிறுபான்மையினரிடம் சொல்ல விரும்புகிறேன். அதே நேரத்தில், குறிப்பாக ஊடகங்கள் வதந்திகளை எடுத்துச் செல்லக்கூடாது, பிழையான விடயங்களை பரப்புரை செய்யக் கூடாது.

என்னைப் புரிந்து கொள்ளுங்கள், என்னுடன் பேசுங்கள், என்னைச் சந்தித்து நான் எப்படி இருக்கிறேன், நான் எவ்வாறு வேலை செய்கிறேன், என்ற சரியான விம்பத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
இது ஒரு சிறிய நாடு, வளரும் நாடு. மக்கள் எங்களுக்கு உதவ வேண்டும், எனது வழியில் தடைகளை வைக்கக்கூடாது. அது யாருக்கும் உதவாது.

இறுதிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக உங்கள் அதிகாரிகளில் சிலருக்கு எதிராக, சில சமயங்களில் உங்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனவே?

உள்நாட்டில் சண்டையிட்டாலும் அல்லது அமெரிக்கர்கள் வந்து ஈராக்கில் அல்லது ஆப்கானிஸ்தானில் அல்லது இங்கிலாந்து அரசு வந்து ஈராக்கில் அல்லது ஆப்கானிஸ்தானில் சண்டையிட்டாலும் போர் ஒரு நம்பிக்கையுடன் பார்க்கும் விடயம் அல்ல. எல்லாம் மிகவும் சுமூகமாக நடக்காது. ஆனால் நாங்கள் ஒரு ஏழை நாடு, நாங்கள் ஒரு குறைந்த பலம் கொண்ட நாடாகும். எனவேதான் எங்கள் விடயங்கள் மேலும் சிறப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வது மிகவும் நியாயமற்றது. ஏனென்றால் ஒரு தேசமாக நாம் பௌத்தர்கள். நாங்கள் மிகவும் அமைதியான தேசமாக இருக்கிறோம். நமது வரலாறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்கிறது. மேலும் எங்களுக்கு மதிப்புகள் உள்ளன, நமது கலாச்சாரம் வளமானது.

வெறுமனே என்னை விமர்சிப்பதைவிட, இந்த விடயங்களை மறக்குமாறு தமிழ் புலம்பெயர்ந்தோரைக்கூட நான் கோர விரும்புகிறேன். இதனால் யாருக்கும் பயனில்லை – மாறாக, நம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நம் நாட்டில் உள்ள மக்களுக்கு (சமூகம்) பொருட்படுத்தாமல் அவர்களுக்கு உதவ வேண்டும்.

பெரும்பான்மை சமூகத்தின் மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விடயங்களை சிறுபான்மை மக்கள் செய்தால் மட்டுமே பெரும்பான்மை சமூகத்தில் அது எதிர்வினையாற்றும். சிறுபான்மை சமூகம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் பிறந்தால் எல்லோரும் இலங்கைக் குடிமக்கள். அவர்கள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால் சிறுபான்மையினர் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னேறிய சமூகங்களில்கூட இந்த பிரச்சினை உள்ளது – என்றார்.