பிரித்தானியாவில் அரசாங்கத்தை ஏமாற்றிய இலங்கை தமிழர் ஒருவர் பெரும் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளதுடன், பெருந்தொகை பவுண்டை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பிரித்தானிய உள்துறை அமைச்சிற்கு எதிராக 7 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கோரி இலங்கையைச் சேர்ந்த வெங்கடேஷ்வரர் கோபாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். குடியேற்ற தடுப்பு மையம் இருந்தபோது தனக்கு கடுமையான காயம் ஏற்பட்டதாகவும், இதனால் தனக்குத் தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படுவதாகவும் கூறி இந்த வழக்கை அவர் தொடர்ந்திருந்தார்.
எனினும் அவர் காரைச் செலுத்துவதிலும், உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்வதிலும், கோ கார்ட் பந்தயத்தில் பங்கேற்பதிலும் ஈடுபட்டது தொடர்பான வீடியோ ஆதாரங்களை உள்துறை அமைச்சு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, 2013 முதல் 2014 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட மனநிலை காயம் காரணமாக தன்னால் வேலை செய்யவோ அல்லது தனியாக வீட்டை விட்டு வெளியேறவோ முடியவில்லை என்று அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நீதிபதி மேன்ஸ் பீல்ட் முற்றாக நிராகரித்தார். மனுதாரர் தற்போது கடுமையான மனநிலை பிரச்சனையால் பாதிக்கப்படவில்லை என்பதையும், அவர் ஒருபோதும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் ஆதாரங்கள் காட்டுவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கிற்கு தேவையான உதவியை ரீனா மேத்யூ என்பவர் வழங்கி வந்தார். மனுதாரருக்கு உதவிகளைச் செய்யும் தன்னார்வலராகவே அவர் காட்டப்பட்டிருந்தார். ஆனால் இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்து வரும் தம்பதிகள் என்பதும், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இருவரும் இணைந்து திட்டமிட்டு இந்தப் போலி இழப்பீட்டு கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்று நீதிபதி முடிவு செய்தார்.
12 ஆண்டுகளாக நீதிமன்ற நேரத்தையும் பொதுப் பணத்தையும் வீணடித்த இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்த நீதிபதி, வழக்கை எதிர்த்துப் போராட உள்துறை அமைச்சருக்கு ஏற்பட்ட அனைத்து சட்டச் செலவுகளையும் மனுதாரரே ஏற்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மனுதாரர் 2010 இல் பிரிட்டனுக்குள் நுழைந்து 2012 இல் விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தார். பின்னர் மருத்துவ காரணங்களுக்காக விடுவிக்கப்பட்ட அவருக்கு, 2023 இல் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னரே அவர் இந்த 7 மில்லியன் பவுண்டுகள் இழப்பீட்டு கோரிக்கையை தாக்கல் செய்தார். ஆனால் அவர் உணவகங்களில் சாப்பிடுவது, குழந்தைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வது மற்றும் விநியோக சாரதியாகப் பணியாற்றுவது உட்பட அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.





