யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நான்கு வயது சிறுமி ஒருவர் மீது தனியார் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள தனியார் முன்பள்ளி ஒன்றில் கல்வி பயிலும் 4 வயது சிறுமியை, அங்கிருந்த ஆசிரியை ஒருவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோாரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார், இத்தாக்குதலை நடத்திய ஆசிரியையை நேற்றைய தினம் கைது செய்தனர்.
எனினும், உயர்மட்டத் தலையீடுகள் காரணமாகக் கைது செய்யப்பட்ட ஆசிரியை நேற்றைய தினமே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சுன்னாகம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.





