கனடாவில் புகலிடம் கோரியுள்ள ஈழத் தமிழர்களுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன், எந்த நேரத்திலும் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இலங்கையில் போர் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் புகலிடம் கோரியவர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குடியேற்ற நாடான கனடா, சமகாலத்தில் இலங்கையர்கள் உட்பட அதிகமானவர்களைத் தொடர்ந்து நாடு கடத்தி வருகின்றது. 2024ஆம் ஆண்டில் 17,397 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 23,160 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த வசந்த கால நிலவரப்படி சுமார் 30,000 பேர் நாடு கடத்தப்படுவதற்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
இந்நிலையில், உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி புகலிடம் கோரிய லக்ஷிகன் புனிதராசா என்ற ஈழத் தமிழர் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகாமையகம் அறிவித்துள்ளது. இலங்கையின் இன அழிப்புப் போரின் நேரடி சாட்சியாளரான அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, கனேடிய தமிழ் சமூகத்தினரிடையேயும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கனேடிய குடியேற்றச் சட்டத்தின் கீழ், எல்லைப் பாதுகாப்பு முகாமையகத்தின் பசுபிக் பிராந்திய அமுலாக்கப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ள இந்த இறுதி வழிகாட்டுதல் கடிதத்தின்படி, லக்ஷிகன் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சரணடைய வேண்டுமென்றும், தவறினால் கைது நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் முகாமையகம் எச்சரித்துள்ளது.
இந்த நாடு கடத்தல் முடிவைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு லக்ஷிகன் தரப்பில் விடுக்கப்பட்ட இறுதி கோரிக்கையும் கனேடிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலுமே இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 5ஆம் திகதி நாடு கடத்துவதற்காக விமான நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், லக்ஷிகன் புனிதராசா நாட்டை விட்டு வெளியேறியமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.





