யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ்காரன் மயூரனின் லீலைகள்!
சுன்னாகம் போலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் போலீஸ் உத்தியோகத்தரான மயூரன் என்பவரின் அராஜகம், சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது.
அந்த வகையில், இவர் வட்டிக்கு பணம் கொடுப்பது மட்டுமல்லாமல், அந்த வட்டிப் பணத்தை வழங்காதவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி பணத்தை வசூலிப்பதுடன், அதற்காக போலீஸ் வாகனங்களையும் பயன்படுத்தி வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இவர் போதைப்பொருள் வியாபாரம், கள்ளமண், கள்ளமரம் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்தால், அவர்களிடமிருந்து பணத்தை இலஞ்சமாக பெற்று தனது உறவினர், நண்பர் எனக் கூறி அவர்களை காப்பாற்றுவதுடன், தன்னுடைய போலீஸ் தொழிலை சரியாக செய்யாமல் அதனை துஷ்பிரயோகம் செய்து ஏனைய போலீஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்து வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமன்றி, வெளிநாடுகளில் உள்ள பெண்கள், திருமணமான, திருமணமாகாத பெண்கள் மற்றும் முறைப்பாடு அளிக்க வரும் பெண்களிடமிருந்து தொலைபேசி இலக்கங்களை பெற்று அவர்களுடன் தவறான உறவுகளில் ஈடுபடுவதுடன், போலீஸ் கிளியரன்ஸ் பெற வரும் பொதுமக்களிடமிருந்து 5000 ரூபாய்க்கு மேல் பணத்தை அறவிடுகிறார் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இவருக்கு எதிராக வரும் முறைப்பாடுகளை மூடி மறைப்பதற்கு உயர் அதிகாரிகளுக்கு பணம், மதுபானம் என்பவற்றை கொடுத்து தான் செய்யும் குற்றங்களிலிருந்து தப்பித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இவர் தனது கள்ளக் காதலியின் வங்கிக் கணக்குகளில் வட்டிப் பணத்தை வைப்பிலிட்டிருப்பதுடன், தனது பெயரில் இல்லாமல் கார், மோட்டார் சைக்கிள், வாகனங்கள், காணிகள் போன்ற பெருமளவு சட்டவிரோத சொத்துக்களை சேர்த்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவரது இத்தகைய செயல்பாடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் போலீஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமைக்கு காரணம் என்ன? உயர் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கைமாறப்படுகிறதா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குற்றத்தை தட்டிக்கேட்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு அனைத்து விதமான சட்டவிரோத செயல்பாடுகளையும் மேற்கொண்டு வரும் குறித்த போலீஸ் உத்தியோகத்தர் தொடர்பில், உயர் அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் இவரது சட்டவிரோத சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

