முத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை திறப்பு!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பிரிவுக்கான நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸினால் திறக்கப்பட்டுள்ளது.
இந்த திணைக்களம் பல்வேறு தேவைப்பாடுகளுடன் இயங்கி வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் 15 மில்லியன் ஒதுக்கீட்டில் நிரந்தர கட்டடம் நிர்மாணிக்கும் பணி ஆரம்பித்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக பணிகளை மேற்கொள்வதற்கான 2019 ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் 5.3 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு குறித்த கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் ந.சுதாகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் த.அகிலன், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ், நீண்டகால அடிப்படையிலேயே இந்த மாவட்டத்தில் பல குடியேற்றத் திட்டங்களின் ஊடாக பல இளைஞர்கள் குடியேற்றப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்காக நீங்கள் ஊக்குவிக்கப்பட்டு இருந்தது என்பது என்னுடைய சிறு வயது முதல் நான் அறிந்த விடையம், அதுமட்டுமல்ல கடந்தகால யுத்தத்திலே முழுமையாக நீங்கள் இந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்து வவுனியாவுக்கு வந்து தங்கி இருந்தீர்கள் உங்களுடைய அனைத்து நலன்களையும் வளங்களையும் இழந்து யாரும் அற்றவர்களாக நீங்கள் நிர்க்கதியாக இருந்ததை நான் பார்த்து வேதனைபட்டிருக்கின்றேன்.
இன்று நீங்கள் மீள வந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகளாகிவிட்டன உங்களுடைய அத்தனை வளங்களும் நலன்களும் மீளமைக்கப்பட வேண்டும் என்பதில் நிச்சயமாக நாங்கள் அக்கறையோடு இருக்கின்றோம் அந்த விடயத்தில் பிரதம செயலாளர் தனது அனுபவங்களையும் வளங்களையும் மிக முக்கியமாக நுணுக்கமாக பகிர்ந்து அதனூடாக நான் கண்டு வருகின்றேன் பல மாவட்டங்களிலே அரச திணைக்களங்களுக்கு உரிய அழகான, நிரந்தரமான, சிறப்பான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அதாவது சிவில் நிர்வாகத்தை மீளக் கொண்டு வரும் ஒரு அடிப்படை செயற்பாடாக இது இருக்கின்றது. அந்த வகையிலே இந்த நேரத்தில் அவருக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன் இந்த செயற்பாட்டிற்காக உழைத்த அனைத்து பொறியியலாளர்கள் திணைக்களங்கள் அனைத்தையும் இந்த நேரத்தில் பாராட்டிக்கொண்டு நிறைவு பெற்ற இந்த கட்டடத்தில் இந்த நீர்ப்பாசனத் திணைக்களம் இயங்க இருக்கின்றது.
இங்கு பிரதம செயலாளர் கூறியது போல் பல உலக வங்கியின் திட்டங்களின் ஊடாக உங்களின் அனைத்து நீர்ப்பாசனக் குளங்களும் அவற்றுக்கான உட்கட்டமைப்புகளும் மறுசீரமைக்கப்பட்டு புதிய விவசாய முறைக்காக உங்களுக்கு கையளிக்கப்பட உள்ளதாக பிரதம செயலாளர் கூறினார்.
தற்போது அதற்கான திட்டங்கள் வரையபட்டுக் கொண்டிருக்கின்றன. நான் நினைக்கிறேன் உங்களுடைய முழுமையான பங்களிப்புடன் திட்டங்கள் வரையபட்டு கொண்டிருக்கின்றன. அந்த வகையிலேயே நான் இங்கு பார்த்த விடயம் என்னவென்றால் நீர்ப்பாசன நடைமுறைகள் உட்கட்டமைப்புகள் நன்றாக செய்யப்பட்டாலும் விவசாயிகள் உங்களது விவசாய முறையை காலத்துக்கும், தேவைக்கும் மாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள் இங்கு கூறப்பட்டது போல் காலநிலை மாற்றம் அத்தோடு சர்வதேச சந்தையிலும் எங்களுடைய தேசிய சந்ததையிலும் பொருட்களை வாங்குவதற்கான நுகர்வோரின் மனநிலை, அவர்களுடைய மனநிலையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு இதோடு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நீர் வளத்தோடும் பாதுகாப்பான மண் வளத்தோடும் மிகவும் முன்னேற்றகரமான விதை பொருட்களை பயன்படுத்தி மிகத்தெளிவான ஒரு விவசாய நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
முற்பது நாற்பது வருட காலத்துக்கு முதல் இலங்கையிலே அல்லது உலகத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயச் செய்கைகள் வேறு இன்று உலகம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றது விவசாய செய்கைகள் வேறு பல நாடுகளில் மண் வளங்கள் போதுமான அளவு இல்லை, நீர்வளங்கள் போதுமான அளவு இல்லை இந்த நிலையில் அவர்கள் மிகமிக நவீன தொழில்நுட்பத்தை கையாண்டு விவசாயத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள் இந்த இடத்திலே எங்களைப் பொறுத்தவரையில் நிறைந்த மண் வளமும், நிறைந்த நீர்வளமும், அதைவிட எற்ற காலநிலையும் இருகின்றது. மற்ற நாடுகளில் ஒரு பருவ காலத்தில் மட்டுமே பயிர் செய்ய முடியும் மற்றய பருவகாலங்களில் அவர்கள் கிரீன்ஹவுஸ் என்று சொல்லுகின்ற அந்த முறைக்குத்தான் அவர்கள் பயிர்களை செய்கிறார்கள்.
ஆனால் இங்கே ஏறக்குறைய 12 மாதங்களும் காலநிலைக்கு ஏற்ற வகையில் பயிர் செய்யக்கூடிய ஒரு காலநிலையையும், மண் வளத்தையும், நீர் வளத்தையும் நாங்கள் கொண்டிருக்கின்றோம். இருந்த பொழுதும் விவசாயத்தின் ஊடாக உச்ச லாபத்தினை பெறுகின்ற ஒரு முறைமை எங்களுக்கு அறிமுகப் படுத்தவில்லை அதை நான் குற்றமாக சொல்லவில்லை அதை செய்கின்ற வழிமுறையை நாங்கள் சரியாக நெறிப்படுத்த வேண்டும்.
நான் கூட எனது அனுபவத்தில் பார்த்து இருக்கின்றேன் வற்றாளைக் கிழங்கை நிலத்தில் செய்வதைத்தான் பார்த்திருக்கிறீர்கள் ஆனால் நான் சீனா சென்றபோது பார்த்திருக்கின்றேன் அங்கு வாழியின் உள்ளே தண்ணீரை நிரப்பி வற்றாளைக் கொடியைப் படர விட்டிருக்கிறார்கள் மண்ணும் இல்லை ஆனால் அதில் இருக்கின்ற கிழங்கு பெரிதாக வளர்ந்து கொண்டிருக்கின்றது இது அவர்கள் அதி நவீன தொழில்நுட்பத்தை பிரயோகித்து கொண்டிருக்கின்றார்கள்.
நாங்கள் அந்த அளவுக்கு செல்லாவிட்டாலும் எங்களுடைய சூழ்நிலைக்கும் கால நிலைகள், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப ஒரு தொழில்நுட்பத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் அதனூடாக நீங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் செய்கின்ற பயிர்களில் கிடைக்கின்ற லாபத்தை விட குறுகிய இடத்தில் குறுகிய காலத்தில் கூடிய பலனை பெற கூடியதாக இருக்கும் எனவே இத்தகைய தொழில் நுட்பங்கள் விளைச்சலை சரியாக செய்கின்றது. தொழில்நுட்பங்கள், சேர்க்கை பசளை ஊடாக அல்ல இயற்கை பசளை ஊடாக செய்கின்ற ஒரு தொழில்நுட்பத்தை நீங்கள் உள்வாங்கி கொள்ள கூடியதாக இருக்கும் எனவே அதற்கான செயற்பாட்டை நான் தற்போது பிரதம செயலாளருடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.
அத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் அதாவது உங்களுடைய வாழ்க்கைக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரத் தேவையில்லை உங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்களை சரியாக பயன்படுத்தி முறையாக பயிர்செய்து அதிகபட்ச பயனையும் அதோடு பெறுமதி சேர்க்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கொள்வதன் ஊடாக சரியான சந்தைப்படுத்தல் மூலமாக நீங்கள் அதிக பலனை பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்
இது ஒரு ஒன்றிணைந்த திட்டமிடல் ஆக இருக்க வேண்டும் தனியே விவசாயத் திணைக்களமோ அல்லது நீர்ப்பாசனத் திணைக்களமோ செய்வதாக இல்லாமல் இந்த மாகாண சபையிலே மத்திய அரசில் இருக்கின்ற எல்லா திணைக்களங்களும் சேர்ந்த ஒன்றிணைந்த திட்டத்தினூடாக உங்களுடைய வாழ்வாதாரத்துக்கு நாங்கள் உதவி செய்வோம் இதற்காக இப்பொழுது திணைக்களங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக ஒரு சமர்ப்பிப்பை கேட்டிருக்கின்றேன்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அதற்காக காத்திருக்கின்றார் அவரோடு நாங்கள் நேரடியாக குறிப்பிடப்பட்ட அமைச்சர்களையும் இணைத்து உங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை நிச்சயமாக காண்போம் என்று தெரிவித்தார்.

