புதினங்களின் சங்கமம்

லண்டன் சென்ற தமிழ் வைத்தியருக்கும் இலங்கை தமிழ் வைத்தியர்களுக்குமிடையில் பேஸ்புக் மோதல்!! நடப்பது என்ன?

பேஸ்புக்கில் வெளியான கருத்துக்கள் தொடர்பாக லண்டன், இலங்கையில் வாழும் தமிழ்  வைத்தியர்களிடத்தில் முறுகலி நிலை தோன்றியுள்ளது. லண்டனில் செயற்படும் வைத்தியர் இலங்கையில் தனியார் மருத்துவமனையில் வைத்தியர்கள் எவ்வாறு பணம் சுருட்டுகின்றார்கள் என பதிவு வெளியிட்டிருந்தார். அந்த பதிவின் பின்னர் பெரும் கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. குறித்த வைத்தியர் வெளியிட்ட பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

எப்படிப்பட்ட வைத்தியரோடு கவனமாக இருக்க வேண்டும்?
எனக்கு இன்பொக்சில் வருகிற மருத்துவ கேள்விகளைப் பார்க்கும்போது கவலைப்படுவதா, அல்லது சிரிப்பதா என்றுகூட புரியாமல் இருக்கும்.
ஒருத்தர் தனியார் வைத்தியசாலையில் மிகப்பெரிய சத்திர சிகிச்சையை செய்த பின் வீடு வந்ததும் , ” இது என்ன சத்திர சிகிச்சை டொக்டர்?” என இன்பொக்ஸில் மெசேஜ் போட்டு இருக்கார்.
சத்திர சிகிச்சைக்கு மொத்தமாக 4 லட்சம் செலுத்தி இருக்கார். வைத்தியருக்கான கட்டணம் மட்டுமே அண்ணளவாக ஒரு லட்சம்.
ஒரு மணிநேர சத்திர சிகிச்சைக்கு வைத்தியருக்கு ஒரு லட்சம் உங்கள் பணத்தை கொடுத்து விட்டு , அது என்ன சத்திர சிகிச்சை என்றுகூட கேட்காமல் போய் ஒப்பரேசன் தியேட்டரில் படுத்துகொண்டீர்களா என்றேன்.
இல்லை, ஏதோ ஒரு கேள்விப்படாத வருத்தம் என்று டொக்டர் சொன்னார் அதுதான் கையெழுத்து வச்சன், அந்த ஒப்பரேசன் கட்டாயம் செய்ய வேண்டுமா?
ஏன், ஒப்பரேசன் செய்திருக்க தேவை இல்லை என்றால் திரும்ப போய் கட்டியை வைத்து தைக்கச் சொல்லப் போகிறீர்களா?
ஒரு மருத்துவராக இப்படி எழுதக் கூடாதுதான். ஆனாலும் என்ன செய்ய ?
தனியார் வைத்திய சாலையில் நீங்கள் குறித்த வைத்தியருக்கு பணம் கொடுக்கிறீர்கள். உங்கள் நோய் பற்றிய முழு விபரத்தையும் அவர் உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.
உங்களுக்கு என்ன நோய் என்று முழுவதுமாக அறிந்து கொள்வது உங்கள் உரிமை. அதற்கு என்ன என்ன மருத்துவ முறைகள் உள்ளன என அறிந்து கொண்டு அதில் உங்களுக்கு பொருத்தமானதை தெரிவு செய்வதும் உங்கள் உரிமை.
அந்த உரிமையை நீங்கள் சரியாக அறியாது விட்டால் மருத்துவத் துறை இலகுவாக மாபியாவாக மாறி உங்கள் பணத்தை பறித்து விடும்.
அதற்காக எல்லா மருத்துவர்களும் அப்படி இல்லை.
இலங்கையில் இன்னும் பணத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல் நோயாளிகளை நேர்மையாக நடத்தும் ஏராளமான வைத்தியர்கள் உள்ளார்கள். அதனால்தால் இவ்வளவு நெருக்கடியிலும் மருத்துவத் துறை சரிந்து விடாமல் தாக்குப் பிடிக்கிறது.
அதே நேரம் பணத்திற்காக மாபியா வேலை பார்க்கும் வைத்தியர்களும் உள்ளார்கள் , அவர்களை எப்படி இனம் காணலாம்?
1. நீங்கள் ஒரு வைத்தியரை தனியாரில் சந்தித்த பின்பு, அரசாங்க வைத்திய சாலையில் தனியாரில் அவரை சந்திக்காத நோயாளிகளோடு எரிஞ்சு விழுந்துகொண்டு தனியார் வைத்தியசாலையில் அவரை சந்தித்த உங்களோடு மட்டும் தேன் ஒழுக பேசுகிறாரா ? அவரோடு கவனமாக இருங்கள்.
2. அரசாங்க வைத்திய சாலையில் ஒப்பரேசன் செய்வதென்றால் ஜீனியர் வைத்தியர்கள்தான் செய்வார்கள். தனியார் வைத்திய சாலை என்றால் நானே பிரச்சினை எதுவும் வராமல் ஒப்பரேசன் செய்து விடுவேன் என்று உங்களை மறைமுகமாக பயங்காட்டுவாரா ?
அவரிடம் கவனமாக இருங்கள். ஒரு மருத்துவ நிபுணராக உங்கள் நோய் நிலமையை கணித்து , அந்த சத்திர சிகிச்சையை எந்தளவு அனுபவம் உள்ள வைத்தியர் செய்ய வேண்டும் என தீர்மானிப்பது, ஒரு பயிற்சி வைத்தியர் செய்தால் அவரை மேற்பார்வை செய்து நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்வது வைத்திய நிபுணரின் கடமை.
3. அரசாங்க வைத்திய சாலைக்கு போனால் லேட் ஆகி உயிராபத்து வரும் , பிரைவேட்டில் என்றால் நாளைக்கே ஒப்பரேஷன் செய்து விடுவேன் என்று பயம் காட்டுகிறாரா? அவர் ஒரு மோசமான மருத்துவர் , கவனமாக இருங்கள்.
ஓரு சில வாரங்கள் தாமதித்தால் கூட உயிராபத்து வரலாம் என்ற தீவிரமான நோய்களுக்கு அவசர சத்திர சகிச்சையை அரசாங்க வைத்திய சாலையில் வழங்கக்கூடிய வசதிகள் உள்ளன.
தேவைப்பட்டால் உயிராபத்து ஏற்படுத்தாத நோயினைக்கொண்ட நோயாளிகளின் சிகிச்சையை பிற்போட்டு விட்டு , உயிராபத்து ஏற்படுத்தக்கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சையை ஏற்பாடு செய்ய வேண்டியது குறித்த வைத்திய நிபுணரின் கடமை.