யாழ் காரைநகர் கலியாண வீட்டில் நடந்த அலங்கோலம்!! பி.ஏச்.ஏ மற்றும் டொக்டர் ஆகியோரை நையப்புடைக்க முற்பட்டவர்களுக்கு நடந்தது என்ன??
யாழ்ப்பாணம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மீதும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகரைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரைநகரில் நூறுக்கும் அதிகமானவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் திருமண நிகழ்வு ஒன்றில் பங்குகொண்டிருந்தனர் என்ற அடிப்படையில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அதில் பங்குகொண்டவர்களை கொரோனாப் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதன் ஒரு கட்டமாக திருமண நிகழ்வு வீட்டாருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது.
இதன் போது பிசிஆர் பரிசோதனைக் கருவியை அவர்களில் ஒருவர் தட்டிவிட்டதுடன், அங்கிருந்த மூவர் சுகாதார வைத்திய அதிகாரியை 02 தடவைகள் தாக்க முற்பட்டதுடன் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் அவர்களில் மூவரைக் கைது செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

