கொரோனாவால் உருவாகும் இரத்தக்கட்டிகள்!! இலங்கையில் மாரடைப்பு உயிரிழப்பு அதிகரிக்கும்!!
இலங்கையில் பரவும் கொரோனா இரண்டாவது அலையில் ஏற்படும் மரணங்களில், மாரடைப்பினால் அதிக மரணங்கள் நிகழ்வதற்கு இரத்தத்தில் கட்டிகள் உருவாகுவதே காரணம் என தெரிவித்துள்ளார் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெறும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகர் வைத்தியர் எரங்க நாரங்கொட.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
“கொரோனா நோயாளிகள் மாரடைப்பினால் உயிரிழக்கும் சம்பவங்களை முதல் அலையில் நாம் அனுபவிக்கவில்லை. ஆனால், இந்த இரண்டாவது அலையில் மாரடைப்பு மூலம் மரணம் ஏற்படும் நிகழ்வுகள் பதிவாகின்றன. முன்னதாக மற்ற நாடுகளில் இரத்த உறைவு பிரச்சினைகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அப்போது இலங்கைக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை.இரண்டு அலைகளில் இறப்புகளை ஒப்பிடுகையில், முதல் அலைகளில் 13 உயிரிழப்புகளில் மாரடைப்பால் 1 உயிரிழப்பு மட்டுமே ஏற்பட்டது. இரண்டாவது அலையில் 17 உயிரிழப்புகளில், மாரடைப்பினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதல் அலையில் பெரும்பாலான உயிரிழப்புகள் மோசமான COVID நிமோனியா காரணமாக நிகழ்ந்தன.
ஆனால் இரண்டாவது அலை வைரஸின் புதிய பரவலில், இரத்தத்தை கொண்டு செல்லும் நாளம் சார்ந்த சிக்கல்களால் பாதிக்கப்படுகிறார்கள். நாளங்கள் மற்றும் நரம்புகளில் உருவாகும் கட்டிகளே பிரச்சனைக்குரியதாக உள்ளது. இந்த கட்டிகள் தமனிகளை (இதய தசைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள்) பாதிக்கும்போது, COVID-19 அறிகுறிகள் மற்றும் நிமோனியா போன்ற சிக்கல்களைப் பெறுவதற்கு முன்பே அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
எனவே, பக்கவாதம் (மூளையை பாதிக்கும் கட்டிகள்) மற்றும் கால்களில் உறைதல் (ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் அல்லது டி.வி.டி) போன்ற பிற சிக்கல்களை நாம் கவனிக்க வேண்டும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

