நாடாளுமன்றத்தேர்தலுடன் சுமந்திரனுடன் ஐக்கியமாகின்றார் விஜயகலா!!
ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் களமிறங்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில் களமிறங்காமல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்க விஜயகலா மகேஸ்வரன் விரும்புகிறார். இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிடம், அவரே தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜயகலா தரப்பில் தகவலறிந்த வட்டாரங்களிடம் தமிழ்பக்கம் வினவியது. ஏற்கனவே எம்.ஏ.சுமந்திரனுடன் பேச்சு நடத்தி இணக்கம் கண்டதாகவும், இதன் பின்னர் அண்மையில் கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கணேஷ் வேலாயுதம் தற்போது ஐ.தே.க பிரமுகர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அவரது பணபலம், கட்சி பிரமுகர்களிடம் நெருங்க வைத்துள்ளத. ரவி கருணாநாயக்க உள்ளிட்ட தரப்புக்களுடன் அவர் நெருக்கம் காட்டி வருகிறார். அடுத்த தேர்தலில் அவர், யாழில் ஐ.தே.க தரப்பினரால் முன்னிலைப்படுத்தப்படுவார் என தெரிகிறது. இது விஜயகலா தரப்பை அதிருப்தியடைய வைத்துள்ளதாக தெரிகிறது. அதேவேளை, கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கினால் வெற்றியடையலாமென்றும் அவர் கருதுகிறார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் களமிறங்கும் விஜயகலாவின் விருப்பத்திற்கு, அந்த கட்சியின் தலைமை சாதகமாக பதிலளித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விஜயகலா விவகாரத்தில் சாதகமான அபிப்பிராயத்தை கூட்டமைப்பின் தலைமை கொண்டிருப்பதை அறிந்தது.

