புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

புலிகள் என மலேசியாவில் கைது செய்யப்பட்ட கணவன்மார்! வீதியில் காவல் இருக்கும் மனைவிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 பேரையும் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் அல்லது உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மலேசியாவின் கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் சந்தியாகு வலியுறுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் தீபாவளி திருநாளுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி, அவர்களின் மனைவிமார் கோலாலம்பூர் புக்கிட் அமான் பொலிஸ் தலைமையகத்திற்கு எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடும் மழையில் அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதை காணும் போது வருத்தமாக இருப்பதாகவும் ஆதாரம் இருப்பதாக கூறப்படுவதால், அவர்களை ஏன் தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்திருக்க வேண்டும் எனவும் சந்தியாகு கேள்வி எழுப்பியுள்ளார்.

கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் அல்லது உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

12 பேரையும் தடுத்து வைக்க வலுவான ஆதாரங்கள் இருப்பதாக பொலிஸாரும் மலேசிய உள்துறை அமைச்சரும் கூறியிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மலேசியாவில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மலேசிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு மாநிலங்களை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர்.

இந்நிலையில், மலாக்கா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனின் மனைவி உமாதேவி தனது கணவரை விடுவிக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள மலேசிய பொலிஸ் தலைமை அலுவலகமான புக்கிட் அமானுக்கு எதிரே வீதியில் அமர்ந்து தனது போராட்டத்தையும் உமாதேவி ஆரம்பித்துள்ளார்.

இதே குற்றச்சாட்டில் கைதாகியுள்ள எஸ். சந்த்ரு, வி. சுரேஷ்குமார் ஆகியோரின் மனைவியரும் உமாதேவியுடன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊடகங்களிடம் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள உமாதேவி, தமது கணவர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் எண்ணமில்லை.

தமது கணவர் சாமிநாதன் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அனுதாப கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்ததுடன் அவருக்கு எந்தவிதத் தொடர்புகளும் இல்லை.

அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பது குற்றமா? தந்தை எங்கே என்று கேட்கும் தனது குழந்தைகளிடம் பொய் சொல்லி நிலைமையைச் சமாளிக்க இயலவில்லை.

மலேசியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் மலாக்கா மாநிலத்தில் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாங்கம் அமைய வேண்டும் என்பதற்காக எனது கணவரும், அவருடன் சேர்த்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்ற இருவரும் கடுமையாக உழைத்தனர். இன்று அவர்களுக்கே இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

எந்தச் சட்டத்தை நீக்க போவதாக நம்பிக்கை கூட்டணி வாக்குறுதி அளித்ததோ, தற்போது அதே சட்டத்தின் கீழ் 12 பேர் கைதாகியுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான என் கணவருக்கே இப்படியொரு நிலைமை என்றால் சாமானியர்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். நாளை மற்றவர்களுக்கும் இதே கதி ஏற்படலாம். இவற்றுக்கெல்லாம் பிரதமர் துன் மகாதீர் பதிலளித்தே தீர வேண்டும் என உமாதேவி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்கக் கோரி, கோலாலம்பூரில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை கைது செய்யப்பட்டவர்களை தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு விடுவிப்பது சாத்தியமல்ல என மலேசிய பொலிஸ் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தின்போது கைதானவர்கள் தமது குடும்பத்தைப் பிரிந்திருப்பது தமக்கு வருத்தம் அளிப்பதாகவும் எனினும் நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் வேறு வழியில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கைதானவர்களின் குடும்பத்தார் உட்பட அனைத்துத் தரப்பினரும் விசாரணை முடியும் வரை பொறுமை காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டவர்கள் நல்லமுறையில் நடத்தப்படுவார்கள் எனவும் சட்டம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமை நிலைநாட்டப்படும் எனவும் பொலிஸ் துறை தலைவர் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், கோலாலம்பூரில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்கிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், இம்மூன்று பெண்கள் தமது போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.